Skip to main content

ஒளித்து வைக்கப்பட்ட ஜெ.வின் பணிப்பெண்கள்... விசாரிக்கக் களமிறங்கும் ஆணையம்!

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், "அதிரடி விசாரணைக் கமிஷன்' என விரைவில் அழைக்கப் படும்' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

"அக்டோபர் 24-ஆம் தேதி காலாவதியாகும் விசாரணைக் கமிஷனை, வருகிற ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள் ளார் நீதிபதி ஆறுமுகசாமி. "அவரது கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் ஏற்கும்' என்கிறார்கள். ஏனென்றால்... விசாரணைக் கமிஷனில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி நிகழ்வுகள் அப்படிப்பட்டவை என சஸ்பென்ஸான படத்தின் த்ரில்லர் காட்சியை நினைவுபடுத்துவது மாதிரி பேசுகிறார்கள் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள்.

 

jaya's-servants


2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி. காலையில் அரசுப் பேருந்துக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டு வந்தவர், இரவு பத்தரை மணிக்குமேல் நினைவற்ற சூழலில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெ. அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் சரியாக இல்லை.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தனக்காக வாதாடிய வழக்கறிஞர் பாலி நாரிமனை ஜெ., சந்தித்தார். ""நீங்கள் சிறைக்குச் செல்வது உறுதி'' என்றார் நாரிமன். அன்று முதல் ஜெ. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தத்திற்கான மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டார். அதனால் அவருக்கு உடல்நிலை குன்றிவந்தது. 22-ஆம் தேதியும் அவர் சாப்பிட வேண்டிய மருந்துகளை சாப்பிடவில்லை. "அக்கா மருந்து சாப்பிடலை' என சசிகலா சொன்ன போதும் ஜெ. அதை கண்டுகொள்ளவில்லை. இரவில் டெல்லியில் யாருடனோ போன் பேசி முடித்ததும் மயங்கிச் சரிந்திருந்த ஜெ.வை சசிகலாதான் எழுப்பினார்.
judge-arumugasamy
ஜெ. மயங்கி விழுந்ததும் சசியின் உறவினரான டாக்டர் சிவக்குமார் வந்தார். ஜெ.வை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இதுதான் சசிகலா தரப்பு, ஜெ.வின் உடல்நலம் குன்றிய 22-ஆம் தேதிபற்றி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு கொடுத்த விளக்கம். இதுபற்றி விசாரணைக் கமிஷனில் பல சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. "ஜெ. நாற்காலியில் மயங்கிக் கிடந்தார்' என சசிகலா, டாக்டர் சிவக்குமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் "ஜெ. ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டி ருந்தார்' என சாட்சியம் அளித்தார். "ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது ஜெ.வுக்கு நினைவு வந்தது' என ஒரு சாட்சியமும் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டி "போயஸ் கார்டனில் சசிகலா வகையறாக்களால் ஜெ. தாக்கப்பட்டார், அதனால் மயங்கி விழுந்தார். அந்த மயக்கமே ஜெ.வின் மரணத்திற்கு காரணம்' என சசிக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கிய ஓ.பி.எஸ்., பொன்னையன், மனோஜ்பாண்டியன் போன்றோர் குற்றம்சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைத்தன்மையை அறிய ஓ.பி.எஸ்., எடப்பாடியுடன் இணைந்த பிறகு ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதோ அதைக் கண்டறிய, போயஸ் கார்டனை நோக்கிப் பயணிக்க அதிரடியாக திட்டமிட்டிருக்கிறார் ஆறுமுகசாமி.

""போயஸ் கார்டனில் ஜெ. தங்கியிருந்த அறை, அவர் மயங்கிச் சரிந்த இடம், போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த இடம், ஜெ.வின் அறைக்குள் சசிகலாவால் எப்படி நினைத்த நேரத்தில் செல்ல முடிந்தது? டாக்டர் சிவகுமார் எப்படி 22-ஆம் தேதி ஜெ.வின் அறைக்கு வந்தார், போயஸ் கார்டனில் "இசட் ப்ளஸ்' பாதுகாப்புப் பிரிவு எப்படி இயங்கியது, ஜெ.வுடன் தங்கியிருந்த உதவியாளர் பூங்குன்றன் எங்கிருப்பார்?, ஜெ.வுக்கு சமையல் செய்த ராஜம்மாள் தங்கி சமையல் செய்த அறைகள் எங்கே உள்ளன?, ஜெ.வுக்கு உதவியாகப் பவனிவரும் பெண்கள் யார் யார்?, அவர்கள் எங்கே தங்கியிருந்தனர், ஜெ. மயங்கி விழுந்ததை 22-ஆம் தேதி அந்தப் பணிப்பெண்கள் பார்த்தார்களா?, ஜெ.வை சசிகலா வகையறாக்கள் தாக்கினார்களா?, அப்படி ஜெ. தாக்கப்பட்டதை பணிப்பெண்கள் யாராவது பார்த்தார்களா? என ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ள ஆணையம், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்ற அறைகளை நேரடியாகச் சென்று ஆராய்ந்ததைப் போல, போயஸ் கார்டனுக்கு வழக்கறி ஞர்கள் துணையுடன் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது'' என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
jaya=doctor
சமீபத்தில் போயஸ் கார்டனில் நடந்து முடிந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு ஒருசில பாது காவலர்களைத் தவிர யாரும் அங்கு தங்குவதில்லை. சமையல் வேலை செய்யும் ராஜம்மாள், இளவரசியின் தி.நகர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஜெ.வுக்கு நீண்டநாட்களாக கால் அமுக்கி விடவும், உடை மாற்றவும், அவர் சொல்லும் பொருட்களை எடுத்துத் தரும் வேலைகளைப் பார்த்தவர் கள் ராணி மற்றும் மகாலட்சுமி. "ஜெ. மரணம் மர்மம்' என சர்ச்சைகள் வெடித்தவுடன் வெயிட்டாக ஒரு தொகை கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார் சசிகலா.

இவர்கள் மட்டுமல்ல... போயஸ் கார்டனில் வேலை செய்யும் அனைத்து வேலைக்காரர்களும் மன்னார்குடி வட்டாரத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள்தான். அவர்கள் ஜெ.வுக்கு பணிவிடை செய்வது சசியின் கண் அசைவின்படிதான் நடக்கும். ஜெ.வின் மரணத்திற்குப் பிறகு ஜெ.வின் பாதுகாவலர் பெருமாள்சாமியின் பாதுகாப் பில் இவர்கள் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வரிசையாக விசாரிக்க திட்டமிட்டிருந்த நீதிபதி ஆறுமுகசாமி முதல்கட்டமாக ராணி, மகா லட்சுமியை ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் செப்டம்பர் 22-ஆம் தேதி என்ன நடந்தது என்பதுபற்றி அப்பல்லோ நிர்வாகம் கைவிரித்த நிலையில்... ""போயஸ் கார்டனில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய ஆணையம் முடிவுசெய்துள்ளது. அத்துடன் போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைவரை பதினேழு சி.சி.டி.வி. கேமராக்கள், ஜெ. சென்ற அப்பல்லோ ஆம்புலன்ஸை பதிவு செய்துள்ளன. அவை அனைத்தையும் பெற்றுத்தரும்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்'' என்கிறது ஆணைய வட்டாரம்.

அ.தி.மு.க.வின் மூலஸ்தானம் என்பது போயஸ் கார்டன்தான். அதையே எட்டிப் பிடித்திருக்கும் ஆணையத் தின் விசாரணை, மர்மங்களை வெளிக்கொணருமா? அல்லது கண்துடைப்பு நிகழ்வாகுமா? என்பது ஆறுமுகசாமியின் போயஸ் கார்டன் விசிட்டும், அவர் நடத்தும் விசாரணையும் தெளிவாக்கும் என காத்திருக் கிறார்கள், தங்கள் தலைவிக்கு என்னாயிற்று என்பதை 2 ஆண்டுகளாக அறிய முடியாமல் இருக்கும் அ.தி.மு.க.வின் தொண்டர்கள்.