துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி, நாளை நடக்கவிருக்கும் போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த வங்காளதேசம் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆனால், முஸ்ஃபிகர் ரஹீமின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி நிதானமான ரன்களைக் குவித்தது. 48.5 ஓவர்களின் முடிவில் 239 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள், விக்கெட்டுகளைத் தக்கவைத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்து வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 202 மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், இரண்டு அணிகளுமே நெருக்கடியுடன் விளையாடின. இறுதியில், வங்காளதேசம் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது. நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்தத் தொடரிலும் வெற்றிபெற்று, கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.