Skip to main content

டி-20 உலக்கோப்பை; இந்திய அணியில் இடம்பெற்ற அதிரடி வீரர்கள்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Action players in the Indian team at T-20 World Cup

இந்தியாவில் தற்போது 2024ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னிலை வகித்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் இந்த ஐ.பி.எல் தொடர்களைக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக கண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கும் வகையில், ஜூன் மாதத்தில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜுன் 1ஆம் தேதி முதல் ஜுன் 29ஆம் தேதி வரை டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்று விளையாடவுள்ளன. 

அதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு அணியும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று (29-04-24) நியூசிலாந்து கிரிக்கெட் அணி வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல்- இல் கலக்கி வரும் போல்ட், மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதனையடுத்து, டி20 உலக கோப்பைத் தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. அதில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ரபாடா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், டி-20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), துபே, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

நடப்பு ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடிவரும் ஷிவம் துபே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். நடப்பு ஐ.பி.எல்-லில் துபே 9 ஆட்டங்களில் ஆடி 350 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் கோலிக்கு பிறகு அதிக ரன்கள் குவித்தவரும், சென்னை அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதே போல், மிகப்பெரிய விபத்துக்கு பிறகு ஐ.பி.எல் தொடரில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். மேலும், தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன், டி-20 உலக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த தொடரில், தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தமிழக வீரர் இல்லாததால் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். நடராஜன் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.