Skip to main content

கரும்பு தொட்டிலும் அண்ணாமலையாரும்... குழந்தைகளுடன் வலம் வரும் தம்பதிகள்..

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Sugarcane cradle and Annamalaiyar ... Couple coming with children ..

 

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், பௌர்ணமி கிரிவலமும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. மகா தீபம் அன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் என சுமார் 25 லட்சம் பேர் திரண்டுவந்து தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தோராயமாக 40 முதல் 50 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள். கரோனோ பரவலைத் தடுக்க ஒன்றிய – மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் பிரம்மாண்டமான தீபத் திருவிழா கோலாகலமில்லாமல் ஆகமவிதிகளின்படி கோவிலுக்குள்ளேயே நடத்தப்படுகிறது.

 

கோவில் வளாகத்திலேயே திருவிழா நடந்தாலும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கடவுளுக்கு தங்கள் நேர்த்திக்கடனைச் செய்ய வேண்டுமெனக் கரும்பு தொட்டிலோடு மாடவீதியை வலம் வருகிறார்கள்.

 

கரும்பு தொட்டிலா?
 

ஹோய்சாள வம்சத்தினர் கர்நாடகா, வடதமிழ்நாடு, ஆந்திராவின் ஒரு பகுதியை இணைத்து சில நூற்றாண்டுகள் ஆட்சி செய்துவந்தனர். இவர்களின் தலைநகரம் ஹௌபேடு, இரண்டாவது தலைநகரம் திருவண்ணாமலை. சோழர்களோடு திருமண உறவு வைத்து கொண்டிருந்தனர் ஹோய்சாள வம்சத்தினர். கி.பி. 1291 முதல் 1343 வரை ஆட்சி செய்தவர் வீர வல்லாள மகாராஜா. அவருக்கு வாரிசு இல்லை, தனக்கொரு வாரிசு வேண்டுமென அண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்தார். அதன்படி அவருக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கிறது. அண்ணாமலையாரே தனக்கு மகனாகப் பிறந்தார் பின் வளர்ந்தார் என்கிறது தலபுராணம். 

 

அண்ணாமலையார் கோவிலின் தலபுராணத்தை படிக்கும், கேட்கும் பக்தர்கள், குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தைப் பேறு வேண்டுமென அண்ணாமலையாரை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்தவுடன் அண்ணாமலையாருக்கு நன்றி செலுத்தும் விதமாக, கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகாதீபம் அன்று, பன்னீர் கரும்பு வாங்கிவந்து அதில் புடவையைக்கொண்டு தொட்டில் கட்டி தங்களது குழந்தையை அதில் உட்கார வைத்து அண்ணாமலையார் கோயில் அமைந்த மாடவீதியை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

 

பன்னீர் கரும்பை பக்தர்கள் பயன்படுத்த காரணம், அது இனிப்பானது என்பதால் கடவுளுக்கு இனிப்பாக நன்றியை செலுத்த வேண்டுமென பக்தர்கள் கரும்பை தேர்வு செய்து காலம் காலமாக அதன்படி கரும்பில் தொட்டில் கட்டுகின்றனர். ஒவ்வொரு தீபத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரும்பு தொட்டில் மூலம் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனோ விதிகளைக்காட்டி திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தீபத் திருவிழா நடைபெறும் 14 நாட்களும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

 

இதனால் இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் தொடங்கியது முதல் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டபடி கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மாடவீதியில் வலம் வருவது பக்தி பரவசத்துடன் இனிமையாய் இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்