Skip to main content

“தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை..” - இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் 

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

"There is no point in Tamils coming back to Sri Lanka ..." Sri Lankan MP Radhakrishnan

 

இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன், திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து பல்வேறு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு காலமான நிலையில், பல புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உள்மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை. அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் சுதந்திரமாக நடமாடும் உரிமைகள் நிறைவேறவில்லை. புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர். 

 

இலங்கையில் 10 வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை. மறுவாழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்திவருகிறது. 30 வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும். சொந்த காணி கிடையாது. எனவே தமிழக முதல்வர் இதனைக் கருத்தில்கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக்கொள்ள நடவடிக்கை தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு நிலவும் சூழலில் கரோனா காரணமாக உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

 

தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு விரக்தியான அரசாக தற்போது புதிய அரசு உள்ளது. மூன்று ஆண்டுகள் கழித்தே விரக்தி ஏற்படும் நிலையில், புதிய அரசு மீது புத்த மக்கள், மத குருமார்கள் என அனைவரும் விரக்தியில் இருப்பதைக் காணமுடிகிறது. இலங்கையில் சீனா தங்களது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிக முதலீடு செய்து இருப்பதைக் காண முடிகிறது. 

 

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி இதுவரையும் வழங்கப்படாத இரட்டை குடியுரிமையை இந்திய அரசும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய பாஜக அரசு இலங்கை நட்புறவை அதிகம் பேணுகிறது. கடந்த காலங்களில் இந்த நட்புறவு அதிகமாக இருந்தாலும் சில நடவடிக்கைகள் பிரச்சனையாக இருந்தது. இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு. அதற்கான சட்டத் திட்டங்கள் அதிகம் ஏற்படுத்தியுள்ளனர். புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு போராளி குழுவும் ஒரு நாட்டில் தலை எடுப்பது கஷ்டம். 

 

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதைக் காண முடிகிறது. சுற்றுலாவை நம்பியுள்ள இலங்கை, படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால்தான் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. அதனால்தான் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 6 மாத காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும். கரோனா முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலகட்டத்தில், அதிமுக ஆட்சியில் கூட பல்வேறு திட்டங்கள் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்