Skip to main content

படைகளை அனுப்பும் பைடன்; எல்லைக்கு இரத்தம் அனுப்பத் தொடங்கிய ரஷ்யா - தொடரும் போர் பதற்றம்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

russia

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது.

 

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. மேலும் பைடன், அடுத்த மாதம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்ப பெற, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவது தவிர்க்கப்படும், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கப்படாது என்பது போன்ற உத்தரவாதங்களை வலியுறுத்தியது. ஆனால் அதனை ஏற்க மறுத்துள்ள அமெரிக்காவும், நேட்டோ படைகளும் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக வேறு சில முன்மொழிவுகளை ரஷ்யாவிடம் முன்வைத்தன.

 

இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரானோடு தொலைபேசி வாயிலாக பேசுகையில் புதின் பேசுகையில், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பதில்கள், ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவில்லை என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் முன்னர், இந்த வாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் பதில்களை ஆராயப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கிழக்கு ஐரோப்பாவிற்கு சிறிய அளவிலான படைகளை அனுப்பப்போவதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த சூழலில் ரஷ்யா, எல்லையில் உள்ள படைகளுக்கு பிற மருத்துவ பொருட்களோடு, இரத்தத்தையும் அனுப்ப தொடங்கியுள்ளது. போரில் காயமடைபவர்களுக்கு  சிகிச்சையளிக்க இரத்தம் பயன்படுத்தப்படும் என்பதால், போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்