Skip to main content

அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்பு; பதற்றத்தில் நடக்கும் பாகிஸ்தான் பொதுத் தேர்தல்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Pakistan's general election is in a state of tension for twin incident

பாகிஸ்தானில் இன்று (08-02-24) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் - இ - இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகின. 

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவரது மனைவி  புஷ்ரா பிபிக்கும், இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நிலையில், இங்கு பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டி நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பிற்காக போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் என பல்வேறு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையை பலத்த பாதுகாப்புக்கும் மத்தியிலும், நேற்று (07-02-24) அங்கு இரண்டு இடத்தில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. மேலும், இந்த வெடிகுண்டு சம்பவம் இரண்டு தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் நகரில் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள தேர்தல் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு சம்பவம் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில், பலரும் சிக்கி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே பலுசிஸ்தானின் பஞ்சர் நகரில் உள்ள வேறொரு தேர்தல் அலுவலகத்துக்கு அருகே மற்றொரு வெடிகுண்டு வெடித்தது.  பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் தேர்தல் அலுவலகமும், அதன் அருகில் உள்ள பல கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன. இந்த வெடிகுண்டு வெடிப்பில் சிக்கி பலர் பலியாகியும், பலர் படுகாயமும் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியானதாகவும், 42 பேர் படுகாயமடைந்ததகவும் பலுசிஸ்தான் மாகாண தலைமை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 5ஆம் தேதியில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.