Skip to main content

இஸ்ரேல் - ஹமாஸ் மீண்டும் மோதல்: மீண்டும் சண்டைக்கு தயார் என இஸ்ரேல் எச்சரிக்கை!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

israel -gaza

 

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதே இருதரப்பு மோதலின் மையமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த மாதம் 10ஆம் தேதி இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

 

இதையடுத்து, பாலஸ்தீனத்தின் காசா முனையைத் தன்னாட்சி உரிமைபெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பு மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். 

 

மொத்தம் 11 நாட்கள் நீடித்த இந்த சண்டையில், இஸ்ரேல் தரப்பில் இரண்டு குழந்தைகள், ஒரு இந்தியர், தாய்லாந்து நாட்டைச் சேர்த்த இருவர் உட்பட 12 பேர் பலியானார்கள். பாலஸ்தீன தரப்பில் 232 பேர்வரை இறந்தனர். இதன்பிறகு சர்வதேச அழுத்தத்தாலும், எகிப்து மேற்கொண்ட சமாதான முயற்சிகளாலும் இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன.

 

இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம், காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா முனையில் இருந்து அனுப்பப்பட்ட தீ பற்றவைக்கும் பலூன்களால் தெற்கு இஸ்ரேலின் வயல்வெளிகளில் தீ பற்றியதாகவும், இதனையடுத்து வான்வெளி தாக்குதல் நடைபெற்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

 

மேலும், காசாவிலிருந்து வெளிவரும் பயங்கரவாத செயல்களை முன்னிட்டு, மீண்டும் சண்டையில் இறங்குவது தொடர்பான அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்