Skip to main content

"கூகுள் நிறுவனம் காப்பாற்ற வேண்டும்"  - சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய கூகுள் ஊழியர்கள்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

sundar pichai

 

இணையதள பயனர்கள் அனைவருக்கும் தெரிந்த நிறுவனம் கூகுள். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். கூகுள் நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக அடிக்கடி புகார் எழுவது வழக்கம். இந்தநிலையில், பாலியல் தொல்லை தொடர்பாக 500 கூகுள் ஊழியர்கள், சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 

அந்தக் கடிதத்தில், பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் காப்பாற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் எமி நியட்பெல்ட், ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், “நான் பாலியல் புகாரளித்த நபருடன், நேருக்கு நேரான மீட்டிங்கில் பங்கேற்க கூகுள் நிறுவனம் நிர்பந்தித்தது. அந்த நபர் எனது பக்கத்து இருக்கையிலேயே அமர்ந்து பணி செய்தார். எனவே தர்மசங்கடத்தில் வேலையைவிட்டு வெளியேறினேன்" என தெரிவித்திருந்தார்.

 

இதனைத்தொடர்ந்து, கூகுள் ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்) பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, புகாருக்கு உள்ளானவரைக் காப்பாற்றுகிறது. புகார் அளித்தவர் மீது சுமை ஏற்றப்பட்டு, அவர் வேலையைவிட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கிறது. அதே சமயம், புகாருக்கு உள்ளானவருக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. பாலியல் தொந்தரவு குறித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடியும், ஆல்பாபெட் மாறவில்லை. தொல்லை தரும் நபர் இல்லாத இடத்தில் பணிபுரிய கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு உரிமை உண்டு. கூகுள் நிறுவனம் அதற்கு முன்னுரிமை அளித்து, ஊழியர்களைக் காப்பாற்ற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்