Skip to main content

சிங்கப்பூர் போல் தமிழகத்தின் துறைமுகங்களை மாற்றும் முயற்சி; சிங்கப்பூரில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூர் நாட்டுக்கு சென்று துறைமுகங்கள் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு.

 

சிங்கப்பூர் துறைமுக ஆணையம், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் சிங்கப்பூர் வருகை தந்து இங்குள்ள துறைமுகங்கள் குறித்து பார்க்கவேண்டும் என அழைப்பு விடுத்தது. அதன் அழைப்பை ஏற்று செப்டம்பர் 27ஆம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயரதிகாரிகள் சிங்கப்பூர் சென்றனர்.

 

சிங்கப்பூர் நாட்டுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் பிரபாகர் அமைச்சரை வரவேற்றார். அதிகாரிகளுடன் சிங்கப்பூர் துறைமுகத்தின் சரக்கு பெட்டக முனையத்தை அமைச்சர் வேலு பார்வையிட்டார். அங்கிருந்த துறைமுக பிரதிநிதி அனைத்தும் சுற்றிக்காண்பித்து அதுகுறித்த தகவல்களை அமைச்சரிடம் தெரிவித்தார். அதன்படி, பன்னாட்டு துறைமுக சரக்கு பெட்டக முனையங்களில் சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக முனையம் துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

2023 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் இந்த துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்கு பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இறங்குதல் வசதி மற்றும் துறைமுக வலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்கு பெட்டங்களை கையாளும் திறன் கொண்டது என்று  அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

 

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையே அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாட்டின் கடற்கரையில் திறனை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

துறைமுகங்கள் மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்கு முதலீடுகளை எளிதாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் துறைமுக பிரநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்கள்.

 

ev Velu study in Singapore to change the small ports of TN like Singapore

 

அமைச்சர் சிங்கப்பூர் சென்றதும் திமுக அயலக அணியின் சிங்கப்பூர் பொறுப்பாளர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்