Skip to main content

ஜோதிகா ஏன் அப்படி பேசினார்? - பின்னணியை விளக்கிய இயக்குனர்

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தான் புதியதாக நடித்துவரும் திரைப்படம் குறித்து பேசுகையில், பல கருத்துக்களை பேசியவர், பேச்சுகளுக்கு இடையே தஞ்சை பெரிய கோயில் குறித்தும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜோதிகா-சசிகுமார் நடித்துவரும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் சரவணன், முகநூலில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 

 

Why did Jodhika speak like that? - Director explaining the background


ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின்போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாக பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார் மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். 
 

 nakkheeran app


வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான். ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது? சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் என சொல்ல முடியுமா?

 

Why did Jodhika speak like that? - Director explaining the background


ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும், அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்பு பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்பு பின்னணியில் என் பங்கும் இருப்பதால்தான் இந்த விளக்கம்.

அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம், எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்...” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார். இந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். 

“சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்...” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது!

 

 

 

சார்ந்த செய்திகள்