Skip to main content

தீ வைத்து எரிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி சிகிக்சை பலனின்றி மரணம்! அதிமுகவினர் இருவர் கைது!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

villuppuram district children incident police investigation

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சிறு மதுரை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் - ராஜி தம்பதிகளுக்கு ஜெயராஜ், ஜெயஸ்ரீ, ராஜேஸ்வரி, ஜெபராஜ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஜெயபால் தனது ஊரில் இரண்டு இடத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஒரு கடையில் ஜெயபால் உறவினர் ஏழம்மாள் என்ற மூதாட்டி கடையைப் பார்த்துக் கொள்கிறார். அந்தக் கடையில் இந்தப் பாட்டியுடன் ஜெயபால் மகன் ஜெயராஜ், மகள் ராஜேஸ்வரி ஆகியோர் இரவில் தங்கிக் கொள்வார்கள். மற்றொரு கடையில் ஜெயபால் அவரது மனைவி ராஜி இன்னொரு மகள் ஜெயஸ்ரீ இன்னொரு மகன் ஜெபராஜ் ஆகியோர் தங்கியுள்ளனர்.

 

 

இந்தநிலையில் நேற்று (10.05.2020) ஜெயபாலுக்கு ஜெயஸ்ரீ (இவர் பத்தாம் வகுப்பு மாணவியும் கூட) தீயில் எரிந்த நிலையில் கடையில் கிடப்பதாகச் செல்போன் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து பதறியடித்துக் கடைக்கு ஓடி பார்த்திருக்கிறார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளதைப் பார்த்து கதறிய பெற்றோர், உடனடியாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியிடம், விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் அவர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளார். ஜெயஸ்ரீ அளித்த அந்த வாக்குமூலத்தில், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அருவியின் கணவர் முருகன் மற்றும் அதிமுக கிளை கழகச் செயலாளர் ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து  கடைக்குள் புகுந்து தன்னை கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.

 

 

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். மாணவி எரிந்த சம்பவம் தெரிந்தவுடன் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி உள்ளார். 


இந்தநிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவி ஜெயஸ்ரீ, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாணவி ஜெயஸ்ரீ மரணமடைந்துள்ளார்.

 

 

இந்த வழக்கு சம்பந்தமாக முருகன், ஏகன் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



 

சார்ந்த செய்திகள்