Skip to main content

22 இல்லை 250 தலைவர்கள் ஒன்று கூடினாலும் முடியாது: வானதி சீனிவாசன் பேட்டி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
Vanathi Srinivasan



மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைப்பெற்ற கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 22 பேர் பங்கேற்று பேசினர். 
 

மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று மம்தா பானர்ஜி பேசினார். 
 

பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினார்கள்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், 
 

இவர்களை ஒன்றிணைக்கக்கூடிய கோஷமாக மோடி எதிர்ப்பு கோஷம், பாஜக எதிர்ப்பு கோஷம் இன்று இருக்கலாம். ஆனால் இவர்களுடைய நம்பகத்தன்மைப் பற்றி, குடும்பக் கட்சிகளைப் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். இங்கிருந்துகூட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு மம்தா பானர்ஜி அழைத்தவுடன் அங்கு செல்கிறார் என்றால், இவர்களைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பு என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர, இந்த ஆட்சிக்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஒரு வலுவான ஆட்சியைத் தரக்கூடிய சிந்தனை என்பது இல்லை.
 

வெறுப்பின்பால் ஏற்பட்ட அரசியல் என்பது ஒருபோதும் இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இல்லை. ஒரு தனிநபரை சுற்றி மட்டுமே இந்திய அரசியலை மாற்ற முடியுமா? என அவர்கள் யோசிக்கிறார்கள். அந்த நோக்கத்திலேயே அவர்கள் சிதையுண்டுபோவார்கள். 
 

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெறும் வெற்றிகளாகட்டும், வாக்கு சதவீதம் உயர்ந்ததாகட்டும் அல்லது பாஜகவுக்கு அங்கு மக்கள் கொடுக்கக்கூடிய ஆதரவும், மம்தா பானர்ஜியை கலங்கடிக்கிறது. அவர் பாஜகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டின் வாயிலாக தன்னுடைய ஆட்சியில் நடக்கின்ற அவலங்களை மறைக்கப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கில் இருந்து ஆரம்பித்து மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக இருப்பதை மறைப்பதற்காக மற்ற தலைவர்களை அழைத்து அங்கு ஒரு நாடகத்தை நடத்தப்பார்க்கிறார்.
 

பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். மேலும் பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி வருகின்றன. பாஜகவின் கூட்டணி பலம் குறைகிறதா?
 

தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, ஸ்டாலின் அங்கு செல்கிறார். பாஜகவுக்கு எதிராக இன்று கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பவர்களுக்குள் என்ன குழப்பம் ஏற்படும் என்று தெரியாது. இன்று கூடிய தலைவர்கள் தேர்தல் வரை ஒன்றாக இருப்பார்களா என்பதும் தெரியாது. நம்பகத்தன்மை இல்லாத தலைவர்களெல்லாம் ஒன்றுகூடி ஒரு தனிநபருக்கு எதிராக, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கூட்டணி அமைப்பது என்பது இந்தியாவில் வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
 

பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும்கூட மற்ற கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது. எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்தக் காரணத்திற்காக வெளியே சென்றிருக்கிறார்கள் என்பதை அந்தந்த மாநில மக்கள் நன்கு அறிவார்கள். கூட்டணியின் எண்ணிக்கை மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. 
 

22 தலைவர்கள் பங்கேற்றிருப்பதால் இந்தக் கூட்டம் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்களே?
 

பாஜகவுக்கு எதிரான ஒரு தாக்கத்திற்கு ஒரு முயற்சியை இவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 22 தலைவர்கள் இல்லை, 250 தலைவர்கள் ஒன்றுகூடி நின்றாலும் பிரதமர் மோடிக்கு இவர்கள் ஈடாகமாட்டார்கள். இந்த ஐந்து வருட காலத்தில் பிரதமர் செய்திருக்கின்ற ஒவ்வொரு தனித் தனி சாதனைகளையும் பட்டியலிட்டு நாங்கள் கொடுக்கிறோம். இதற்கு மாற்றாக என்னவெல்லாம் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில், அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் பட்டியலிடட்டும். இந்த மாதிரியான ஆரோக்கியமான போட்டிக்கு வந்தால் பாஜக அதற்கு தயாராக இருக்கும். ஆனால் இல்லாத கற்பனை கதைகளை கூறிக்கொண்டு மக்களை திசைத்திருப்ப பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். 



 

சார்ந்த செய்திகள்