Skip to main content

திருச்சி மாநகரில் வீடற்றோருக்காகக் கூடுதலாக மூன்று தங்கும் விடுதிகள்!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Three additional hostels for the homeless in Trichy!

திருச்சி மாநகரில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்ற நபர்கள் சாலையோரங்களிலும் பாலங்களுக்கு அடியிலும் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் சாலை மையத் தடுப்புகளில் இரவு நேரங்களில் படுத்துறங்கி வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு திருச்சியில் 3 இடங்களில் ஆதரவற்றோர் தங்கும் விடுதிகள் உணவு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக வருவோருக்கு இடம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து மேலும் 3 இடங்களில் இரவு தங்கும் விடுதிகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கென ரூ.1 கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில்" தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, தங்குமிடம், சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர், நோய் வாய்ப்பட்டோர் தங்க இயலாது. நல்ல முழு ஆரோக்கியத்துடனும் மன நலம் பாதிக்காக நிலையிலும் உள்ள ஆதரவற்றோர், வீடற்றோர் மட்டுமே இவற்றில் இரவு நேரங்களில் மட்டும் தங்க முடியும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும், இதற்கென தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் இரவு நேர தங்கும் விடுதிகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் ஏற்கெனவே, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பாரதியார் சாலை, கோட்டை பகுதியில் கீழரண் சாலை, மதுரை சாலை உள்ளிட்ட இடங்களில் தலா 50 பேர் தங்கும் வகையில் விடுதிகள் உள்ளன. அவை பராமரிப்புகளுக்காக சில சமூக நல (என்ஜிஓ) அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கென பிரத்யேகமா பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் சிலர் நீண்டகாலமாக தங்கியிருப்பது குறித்த புகார்களைத் தொடர்ந்து, இரவு தங்குமிடங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தியது. இந்நிலையில் இவற்றுக்கு புதிதாக தங்க வருவோருக்கு இடமளிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. பலர் அவற்றில் நிரந்தரமாக தங்கியிருப்பதால் இந்நிலை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்