Skip to main content

காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
thirumavalavan



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காந்தியடிகளின் 71ஆவது நினைவு நாளான ஜனவரி முப்பதாம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இந்து மகா சபையின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே என்பவரது தலைமையில் ஒரு கும்பல் காந்தியடிகளின் உருவபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்து அவமானப்படுத்தியுள்ளது. அத்துடன் காந்தியடிகளைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செய்து கோட்சே வாழ்க என்று முழக்கமிட்டு உள்ளனர். 
' தசரா பண்டிகையின் போது ராவணனின் உருவபொம்மையை எரிப்பது எப்படி வழக்கமாக இருக்கிறதோ இனி ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் நினைவு நாளில் அவரது உருவப். பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரிப்பது வழக்கம் ஆக்கப்படும் என்றும் அந்தக் கும்பல் அறிவித்துள்ளது.
 

துப்பாக்கிப்  கலாச்சாரத்தைப் பரப்பும், வன்முறையைத் தூண்டும் செயலை நடத்திய இந்து மகா சபை தலைவி பூஜா ஷாகுன் பாண்டே என்பவர், பாஜக தலைவர்களான உமாபாரதி, முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர்  சவுகான் முதலானவர்களுக்கு நெருக்கமானவர் என்பது அவர்களோடு இருக்கும் பூஜாவின் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இதுவரை பிரதமர் மோடியோ மத்திய அரசோ கண்டனம் தெரிவிக்காதது அவர்களும் இதை ஆதரிக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. 
 

தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளின் உருவப் பொம்மையைத் துப்பாக்கியால் சுட்ட வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பி அந்த கும்பல் இந்தியாவெங்கும் வன்முறையைத் தூண்டி உள்ளது. இது ஒரு பயங்கரவாத செயல் ஆகும். 
 

எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பூஜா ஷாகுன் பாண்டே உள்ளிட்ட சனாதன பயங்கரவாதக் கும்பலை பயங்கரவாதத்  தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்து மகாசபை என்ற அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்ய வேண்டும் என பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.
 

காந்தியடிகளை இழிவுபடுத்திய பயங்கரவாத கும்பலை ஊக்குவிக்கும் மோடி அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்