Skip to main content

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; நாகை மீனவர்கள் போராட்டம்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Sri Lankan incident Nagai fishermen 
கோப்புப்படம்

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். ஆறுகாட்டுதுறையில் இருந்து கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அருள்மணி, செல்வமணி, தினேஷ் ஆகியோர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான படகில் வெற்றிவேல், முருகன், வேலன், தமிழழகன் ஆகியோரும் அதேபோன்று செந்தில் அரசன் என்பவருக்குச் சொந்தமான படகில் வினோத், மருது ஆகியோர் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3  அதிநவீன படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி பயங்கர ஆயுதங்களைக் கொண்டு 11 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

 

மேலும் மீனவர்களிடம் இருந்த 800 கிலோ மீன்பிடி வலை, செல்போன்கள், திசை காட்டும் கருவி ஜி.பி.எஸ். கருவிகள், பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் பாஸ்கர் என்பவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அருள் ராஜ் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பிய மீனவர்கள் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுதுறை கரை நோக்கி மீனவர்கள் திரும்பியுள்ளனர்.

 

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் பாஸ்கர், அருள் ராஜ், செந்தில் அரசன், மருது, வினோத் ஆகியோருக்கு வேதாரண்யம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாஸ்கர்  மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதைக் கண்டித்து ஆறுகாட்டுதுறை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆறுகாட்டுதுறை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்