Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா... சூசகமாக சொன்ன ஓபிஎஸ்... பரபரப்பை ஏற்படுத்திய கூட்டம்!

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

ops

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசப்பட்டியில் முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க.-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்  பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஓ.பி.எஸ் கலந்து கொண்டு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை செய்தார். அப்போது நிர்வாகிகள் சிலர் பேசும் போது, " சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தமிழகத்தில் ஆட்சியை அ.தி.மு.க. தக்க வைத்திருக்கும். எனவே அவர்கள் இருவரையும் மீண்டும் அ.தி. மு.க.வில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குரல் கொடுத்தனர்.

 

அப்போது ஓ.பி.எஸ் பேசும் போது, "அதற்குக் காலம் தான் பதில் சொல்லும் காலம் கனியும் காத்திருங்கள்" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், "அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைப்பது, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கிறோம். அதை வைத்து இந்த இணைப்பைச் சாத்தியப்படுத்த வேண்டும்" என்றனர்.

 

அதற்கு ஓ.பி.எஸ், அப்படி தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தால் அதைக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்கிறோம்" என்றார். அதையடுத்து, மாவட்டச் செயலாளர் சையதுகான் மற்றும் முன்னாள் எம்.பி .பார்த்திபன் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் அ.தி. மு.க.-அ.ம.மு.க. இணைப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

 

இது சம்பந்தமாக  மாவட்டச் செயலாளர் சையதுகானிடம் கேட்ட போது, " அ.தி.மு.க., அ.ம.மு.க. இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது தொடர்பாக எனது தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) தேனியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இந்த தீர்மானம் குறித்து அறிவித்து, ஒப்புதல் பெற்று தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம்" என்றார்.

 

இப்படி  திடீரென சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-வில் இணைக்க ஓ.பி.எஸ் சூசகமாகப் பச்சைக்கொடி காட்டியது நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே அடுத்தடுத்த நாட்களில் தேனியைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் சசிகலாவை இணைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்