Skip to main content

“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி!”-போட்டுத் தாக்கும் ராஜேந்திரபாலாஜி!

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

இடைத்தேர்தலில் போட்டியிடும் சாத்தூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோர் பங்கேற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாத்தூரில் நடந்தது.  

 

அந்த மேடையில் மைக் பிடித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

 

uthyanithi vs rajentharabalaji

 

“ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவெடுத்திருப்பாரோ, அதைத்தான், எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் எடுத்திருக்கிறார்கள். அதிமுக கூட்டணி தெய்வீகமானது. தெய்வ கடாட்சம் நிறைந்தது.  நரேந்திர மோடியைப் பார்த்து அந்நிய சக்திகள் பயப்படுகின்றன; அலறுகின்றன. தீய சக்திகள் ஓடி ஒளிகின்றன. ஒரு வீரமான இரும்பு மனிதர் நரேந்திர மோடி. சைனா இன்றைக்குப் பயப்படுகிறது. பாகிஸ்தான் மிரள்கிறது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் நிம்மதியாக வாழவேண்டும். அதற்கு யார் பிரதமராக வரவேண்டும்? ஒரு கலப்பினம் இல்லாத, கலப்படம் இல்லாத ஒரு ஒரிஜினாலிடி பிரதமர் வேண்டும். அது யார்? நரேந்திரமோடி. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல் கலாமை ஜனாதிபதி பதவியில் அமரவைத்தது யார்? வாஜ்பாய்.. பிஜேபி.  ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்ற கிறிஸ்தவ சகோதரரை பாதுகாப்பு அமைச்சராக ஆக்கியது யார்? பிஜேபி ஆட்சி. எங்கேயிருக்கிறது மதவாதம்? இந்திராகாந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. ராஜீவ்காந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. இப்போது இருப்பது  இந்திய காங்கிரஸ் இல்லை. இத்தாலி காங்கிரஸ். இந்த காங்கிரஸை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்றார். 

 

அடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி “அதிமுக தேர்தல் அறிக்கையை காமெடி அறிக்கை என்று சொல்வதற்கு மு.க.ஸ்டாலின் யார்? அவரே ஒரு காமெடி பீஸ்தான். ஒருகோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இது நடக்கின்ற காரியமா? 2000 ரூபாய் நிதியை தேர்தலுக்குப் பிறகு கொடுப்போம். நாங்கள் சொல்வதைச் செய்வோம். சொல்லாததையும் செய்வோம். திமுக அப்படி கிடையாது.  சொன்னதைச் செய்ய மாட்டார்கள். ஸ்டாலின் ஒரு அப்பாவி. அவர் கட்சி நடத்துவதற்காக, தன் கட்சியினருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக ஏதாவது சொல்கிறார். வைகோ ஒரு நல்ல போராளியாக இருந்தவர். இன்றைக்கு அவருக்கு என்ன நிலைமையோ தெரியவில்லை. ஸ்டாலின் முன்னால் போய் கூனிக்குறுகி நிற்கிறார். அது அவருடைய நிலைமை.

 

முதலமைச்சரையோ, துணை முதலமைச்சரையோ பற்றி சொல்வதற்கு உதயநிதி ஒன்றும் பெரிய ஆளு கிடையாது. அவர், நானும் ரவுடிதான்; நானும் ரவுடிதான்னு சொல்கிற வடிவேலு மாதிரி இப்போது வந்திருக்கிறார்.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்