Skip to main content

மரம் தங்கசாமி நினைவாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய இளைஞர்கள்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

மரம் வளர்க்க தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மரம் தங்கசாமி நினைவாக இளைஞர்கள் லட்சம் மரக்கன்றுகள் வழங்கினார்கள். 

 

puthukottai tree plantation

 

 

வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கவும், அரசு மற்றும் தனியார் விழாக்கள் தொடங்கும் போதும், தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள், முக்கிய தினங்களில் மரக்கன்றுகளை நட்டு அடையாளப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சென்று 
பிரச்சாரம் செய்து பல லட்சம் மரக்கன்றுகளை நட்ட மரம் தங்கசாமி நினைவாக தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கசாமி. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று மரக்கன்றகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். அதன் மூலம் அதிக வருமானம் கிடைத்தது. அதனால் மரப்பயிரும் பணப்பயிரே என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் 
சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பள்ளிகள், பொது இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் பொது இடங்களிலும், பள்ளி, அலுவலக வளாகங்களிலும், பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அதே போல மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்கள் மறைந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினம், மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினம், சுற்றுச்சூழல் தினம், என்று ஒவ்வொரு முக்கிய தினங்களிலும் தன் வீட்டுத் தோட்டத்திலும், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார். 

 

puthukottai tree plantation

 

மேலும் அவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு திருமணம், காதணி விழா, மற்றும் பள்ளி, அரசு அலுவலக விழாக்களின் விழா தொடங்கும் முன்பு மரக்கன்றுகளை நட்டு தொடங்குவதும், அனைவருக்கும் மரக்கன்றுகளையே பரிசாக வழந்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். தன் வீட்டிற்று யார் வந்தாலும் முதலில் கண்ணாடியை பார்த்து கும்பிடச் செய்துவிட்டு அவர் வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்று நட வைப்பது வழக்கம். இந்த நிகழ்வு பற்றி ஈசா விழாவில் முதலமைச்சரே பெருமையாக பேசினார். தனது திருமண நாளில் மரக்கன்று நடத் தொடங்கி கடந்த ஆண்டு அவர் மறையும் வரை மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் மரக்கன்று நடப்பட்டது. 


மரம் தங்கசாமி இயற்கை வேணான் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு விழிப்புணர்வு பயணங்களில் சுற்றி வந்தவர் என்பதால் தமிழ்நாடு முழுவதும் தங்கசாமியை பற்றி தெரிந்தவர்கள் அதிகம். அதனால் அரவது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தங்கள் வீடுகளின் மரக்கன்றுகளை நட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். 

அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகள், மற்றும் பஸ்சில் சென்ற அனைத்து பயணிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்திடம் மரக்கன்றுகள் வழக்கப்பட்டதுடன் 
சேந்தன்குடி, உள்ளிட்ட பல அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் மரக்கன்றுகளை இளைஞர்கள் வழங்கினார்கள். மேலும் கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் தாங்கள் சீரமைத்த நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டனர். பேராவூரணி கைஃபா குழுவினர் பல இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.  இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, "மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மரம் தங்கசாமி. அவர் சொன்னது தற்போது அதிகம் தேவையாக இருப்பதால் இளைஞர்கள் அந்தப் பணியை முன்னெடுத்து செய்து வருகிறோம். கஜா புயல் அழித்த மரங்களையும் விரைவில் மீட்டெடுப்போம்" என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்