Skip to main content

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி... கிராமத்து மாணவர்களின் குரலை வளப்படுத்தி வரும் ஆசிரியை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மீனா ராமநாதன். இவர் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துடன் பல்வேறு தனித்திறன்களையும் வளர்க்கும் விதமாக பாட்டு, ஓவியம், ஆடல், நாடகம் உள்ளிட்ட மாணவர்களின் பல திறமைகளையும் வெளிக் கொண்டு வருகிறார். 


மேலும் சின்னக்குயில் என்னும் வாட்ஸ் அப் குழுவினை உருவாக்கி மாணவர்களின் குரல் உள்பட அத்துனை தனித் திறனையும் சிறப்பாக்கி தனித்துவமாக காட்டி வருகிறார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அத்தனை பாடங்களையும் வெறும் பாடமாக மட்டும் போதிக்காமல் பாட்டு, நாடகம், ஓவியம், நடனமாக கற்றுத் தருகிறார். வரலாற்று பாடங்களை உணர்ச்சி மிக்க தோற்றங்களுடன் சொல்லிக் கொடுப்பதால் மாணவர்களும் அந்த ஏற்ற இறக்கங்களுடன் பேசி பாடத்தில் உள்ள வரலாற்று நாயனாகவே மாறி விடுகிறார்கள்.

pudukkottai school teacher and students innovative activities

மாணவர்களால் பாடப்படும் மண்மணக்கும் கிராமியப்பாடல்களும், பாடம் சார்ந்த பாடல்களும்  தமிழ், ஆங்கில செய்தி வாசிப்பு என மாணவர்களால் வாசிக்கப்படும் செய்திகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வாட்ஸ் அப் குழுவில் பதிவிடும் பொழுது அவை வானொலி நிகழ்ச்சிகளாவும், செய்திகளாகவுமே மாறிவிடுகிறது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியை மீனா ராமநாதனை பற்றி மகளிர் தினத்தன்று மகளிர் தின சிறப்பு செய்தியாக நக்கீரன் இணைய தளத்தில் வந்த செய்தியை பார்த்த பலரும் ஆசிரியையை பாராட்டியதுடன் மேலும் சிறப்பாக செயல்பட உற்சாகப்படுத்தினார்கள். 


இந்த நக்கீரன் இணைய செய்தியை படித்துப் பார்த்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் வரவழைத்துப் பாராட்டினார். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும். அதனை அந்த ஆசிரியர்கள் தனது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது அந்த மாணவர்கள் சிறந்த மாணவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். அந்த மாணவர்கள் தான் வருங்காலங்களில் சாதிப்பார்கள் என்றார். மேலும் இப்படி தனித்திறனுடன் செயலாற்றும் ஒவ்வொரு பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்துவதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
 

நிகழ்வின் போது இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவர் எஸ்.இராஜேந்திரன், கவரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சிவக்குமார், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்