Skip to main content

மினி டெம்போ கவிழ்ந்து விபத்து... 23 பெண்கள் படுகாயம். 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு ஊராட்சியில், அதே ஊர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட பெண்கள் வடக்கு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மாலை வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்ல சுமார் 3 கி.மீ நடக்க தொடங்கிய போது, அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்திய ஊராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களை ஏற்றி அனுப்பியுள்ளனர்.


மேற்பனைக்காடு கிழக்கு பகுதிக்கு அருகே வயல் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது மற்றொரு வாகனத்திற்கு வழி விட முயன்ற போது பெண்களை ஏற்றிச் சென்ற மினி டெம்போ வயல் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெண்களின் கதறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து அனைவரையும் மீட்டனர். அதில் 30- க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
 

pudukkottai mini tempo incident womens admit at govt hospitals


மேலும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் 9 பெண்களை ஏற்றி அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்றவர்களை அப்பகுதியில் நின்றவர்கள் தங்கள் வாகனங்களில் ஏற்றி மேற்பனைக்காடு அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், ஆம்புலன்ஸ் திரும்பி வர தாமதம் ஆகும் என்பதால் காயமடைந்திருந்த மேலும் 14 பெண்களை பயணிகள் வேன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஷாஜகானின் காரில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமைனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இருப்பினும் சந்திரா, மலர், மாலதி, தேவிகா, ஞானசுந்தரி, தெய்வானை உள்ளிட்ட 6 பேரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்து ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த கீரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வாகனத்தை மீட்டனர். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்