Skip to main content

கூட்டணிக்குப் பின் பா.ம.க. அதிருப்தி; தொடரும் இழுபறி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
pmk discontent after alliance; Continued drag

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இன்று அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்களும், அமமுகவுக்கு இரண்டு இடங்களும், தமமுகவுக்கு ஒரு இடமும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடமும், இமகமுவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் பாமகவிற்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்துள்ளதால் பாமக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்கும் தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளை ஒதுக்குவதிலும் சிக்கல் நீடிப்பதால் ஜி.கே. வாசன் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை பாஜக ஒதுக்க மறுத்துவிட்டதால் ஓபிஎஸ் தரப்பும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

யாருக்கு எத்தனை தொகுதி என்பது முடிவான நிலையில், எந்தெந்த தொகுதி என்பதை உறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது வரை தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசனுக்கும், ஓபிஎஸ் அணிக்கும் எத்தனை தொகுதிகள் என்பதே பாஜக கூட்டணியில் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

சார்ந்த செய்திகள்