Skip to main content

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Part-time teachers appeal to bring attention-grabbing resolution in assembly

 

சட்ட சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் பகுதி நேர ஆசியர்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012 ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் 6 ஆயிரம் காலியிடங்கள் இதுவரை ஏற்பட்டுள்ளது. தற்போது பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். தற்போது வரை ரூ.10ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்பட 8 சிறப்புப் பாடங்களை நடத்துகின்றனர். 12 ஆண்டாகப் பணிபுரியும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

 

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகக் கூறியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 29 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. பணி நிரந்தரம் வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் செப்டம்பர் 25 முதல் 10 நாட்களாகக் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.

 

இந்த நிலையில் 4-10-2023 அன்று செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.2500 உயர்த்தி, 12500 ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 10 லட்சம்வரை மருத்துவ காப்பீடு அளிக்கப்படும் என அறிவித்துப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்க மறுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்த  நிலையில் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

பணி நிரந்தரம் செய்யாத நிலையில் அதற்கு முன்னோட்டமாக,அனைத்து வேலை நாட்களும் முழு நேரப் பணி மற்றும் மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்பதை பகுதிநேர ஆசிரியர்கள் கோரி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்