Skip to main content

“பா.ஜ.க.வுக்கு இந்தியா கூட்டணியால் நிச்சயம் மரண அடி கிடைக்கும்” - நக்கீரன் ஆசிரியர் 

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
India alliance will surely kill BJP says Nakkheeran Editor

சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்​ வன்னி அரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா நேற்று (27.2.2024) மாலை 5 மணிக்கு​ நடைபெற்றது. இதில் நக்கீரன் ஆசிரியர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நூலினை வெளியிட, அதனை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.​

மேலும் இந்நூலுக்கு வாழ்த்துரையாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா,​ தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.​ ​

இதில் நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், “தமிழகத்தில் இன்றைக்கு மோடி வந்துள்ள நாளான அதே நாளில் வன்னியரசின் ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியிடுவது சரியான நாளாக அமைந்துள்ளது. விசிகவுடன் எப்போதும் நான் நிற்பதற்கு காரணம், பல நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதும் எனக்கு முதலாக கைகொடுக்க நிற்பவர் திமுக முன்னாள் தலைவர் கலைஞர். அந்த வரிசையில் எப்போதும் எங்கள் திருமா மற்றும்  வன்னியரசு இருப்பார்கள். ஆகையால் இருவருடன் பயணிப்பதில்  எனக்கு பெருமையாக உள்ளது. 

மனிதர்களை சேர்த்து வைத்துள்ளதில் வன்னிக்கு நிகர் யாருமில்லை, ‘அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு’ வள்ளுவன் கூற்றுப்படி நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள் தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.  இது மோடிக்கே பொருந்தும். அடுத்த வரும் ஆட்சியும் நாங்களே என மார்தட்டிக்கொள்ளும் பிஜேபிக்கு இந்தியா கூட்டணியால் நிச்சயம் மரண அடி கிடைக்கும். இந்த நாடு எந்த சூழ்நிலையில் உள்ளது என்றால் 68 ஆயிரம் கிலோ ஹெராயின் காணாமல் போயுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு 5 லட்சம் கோடி. இதனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. 1 கிராம் ஹெராயினுக்கு தேசியப் புலனாய்வு முகைமை அமைத்து தேடும் இவர்கள், 68 ஆயிரம் கிலோ ஹெராயின் காணாமல் போனதை வழக்காகக் கூட பதிவு செய்யவில்லை. மோடி ஆட்சியின் லட்சணம் இப்படித்தான் உள்ளது. வருகின்ற தேர்தலுக்கு வன்னி எழுதிய இந்த புத்தகம் பக்கபலமாக இருக்கும்” என்றார்.

சார்ந்த செய்திகள்