Skip to main content

அரசு பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்! அன்புமணி

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
School 600.jpg


அரசு பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகள் 41 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.  கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாத நிலையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலை சமாளிப்பதற்கான       மின்விசிறி வசதி கூட பல பள்ளிகளில் இல்லாத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது சரியானதல்ல.


 

School 600.jpg

தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்குக்கும் முறையே ஏப்ரல் 20,21 ஆகிய தேதிகளிலிருந்து  கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கம் போலவே கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதத்தின் முதல் வேலைநாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும், குறிப்பாக  தென்மேற்கு பருவமழையின் எல்லைக்கு அப்பால் உள்ள வட மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக உள்ளது. கத்திரி வெயில் முடியும் வரை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தாண்டாத சென்னையில் கத்திரி வெயில் முடிவடைந்த பிறகு  100 டிகிரிக்கும் கூடுதலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தமிழக அரசு ஒத்திவைத்திருக்க வேண்டும்.
 

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் வரும் 11-ஆம் தேதி முதல் தான் திறக்கப்படவுள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் பள்ளிகளும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இம்மாத இறுதியில் தான் திறக்கப் படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அரசு பள்ளிகள் மட்டும் அவசர, அவசரமாக திறக்கப்படுவதன்  காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனியார் பள்ளிகளில் மின்விசிறி உள்ளிட்ட வசதிகள்  உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் மின்விசிறிகள் கூட இல்லை. சில நகர்ப்புற அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாகவும், நன்கொடையாளர்கள் மூலமாகவும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தாலும்,  பெரும்பாலான ஊரகப் பள்ளிகளில் மின்விசிறி வசதி இல்லை. மின்விசிறி உள்ள அரசு பள்ளிகளில் கூட ஆசிரியர்களும், முன்வரிசை மாணவர்களும் மட்டும் தான் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதை பயிற்றுவிப்பதற்கு வசதியாக பள்ளிகளின் வேலை நாட்கள் 210&லிருந்து 225 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க வேண்டியிருப்பதாக அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதேபாடத்திட்டத்தை பின்பற்றவுள்ள தனியார் பள்ளிகள் இம்மாத மத்தியில் தான் திறக்கப்படவுள்ளன என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு இன்னும் முழுமையான பயிற்சி அளிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பள்ளிகளை திறப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

 

school


 

பாடத்திட்டத்தை முடிப்பதை விட மாணவர்கள் கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருப்பதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். எனவே, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு சீருடைகளும், பாடநூல்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரை பெற்று கோடை வெயில் தணிந்த பிறகு அனைத்து பள்ளிகளையும்  மீண்டும் திறக்க அரசு ஆணையிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் புதியப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொறுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்