Skip to main content

“மழைக்கு இதுவரை 5 பேர் உயிரிழப்பு” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

"Five people have passes away due to rain so far" - Minister K. K. S. S. R.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

 

இது புயலாக மாறும்போது அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மழையால் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மழைக்கு இதுவரை ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 98 கால்நடைகள் பலியாகியுள்ளன, 420 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை பாதிப்பு அதிகமிருக்கும் பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 

 

மனித உயிரிழப்புக்கும், கால்நடை உயிரிழப்புக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாய பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் காலதாமதம் ஆகிறது. அதற்கு காரணம், பயிர் பாதிப்புகளை வேளாண்துறை ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும். அதன் காரணமாக மட்டுமே அது தாமதமாகிறது. மழை வெள்ளம் பாதிப்பு எங்கெங்கு வரும் என எதிர்பார்க்கிறோமோ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் எல்லாம் மீட்கப்பட்டு ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்