Skip to main content

கடலுக்கு கிளம்பிய மீனவர்கள்... தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகள்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

Fishermen who went to sea ... Government officials detained!

 

நாகை நம்பியார் நகரில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி கடலுக்குச் சென்ற மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறு சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள ஒருபிரிவு மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது, அப்படி அனுமதித்தால் மீன்வளம் அழிந்துவிடும் என மற்றொரு பிரிவு மீனவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பிவருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று (26.07.2021) காலை நாகை நம்பியார் நகர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 8 படகுகளில் சுருக்குமடி வலைளை ஏற்றி கடலுக்குச் செல்ல தயாராகிவந்தனர். இதுகுறித்து தகவலறிந்து நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு வந்த மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மீனவர்களைக் கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சனை பெரிதாகும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ‘சுருக்குமடி வலைகளை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், 5000 மேற்பட்ட மீனவர்கள் மறைமுகமாகவும் இருக்கிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. எனவே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என  மீனவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். 

 

Fishermen who went to sea ... Government officials detained!

 

இரண்டு நாட்களுக்குள் அரசிடம் பேசி முடிவெடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதனால் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்த ஏராளமான நம்பியார் நகர் மீனவர்கள் கடற்கரையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் நம்பியார் நகர் கடற்கரை பகுதியில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்