Skip to main content

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது!-ராமதாஸ்

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

பாட்டாளி மக்கள் கட்சி  நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்படும் இந்த நடவடிக்கை சீரழிவாகவே அமையும்.

 

 Do not cancel the compulsory passing procedure up to the eighth grade! -Ramadass

 

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2010-ஆம் ஆண்டு முதல் நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றாலும் கூட, அதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கும் வழக்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில்  நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நடவடிக்கையால் தேசிய அளவில் இடைநிற்றல் விகிதம் மிகப் பெரிய அளவில் குறைந்தது. ஆனால், இந்த நடைமுறையை விரும்பாத மத்திய அரசு, அதை மாற்றுவது குறித்து பரிந்துரைக்க 2012-ஆம் ஆண்டில் வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை  மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கான சட்டத்திருத்தம் மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மாநிலங்களவையிலும் அதற்கான சட்ட முன்வரைவை கடந்த மாதம் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

 

மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் உட்பட மொத்தம் 24 மாநிலங்கள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை திருத்தத் தீர்மானித்துள்ளன. அம்மாநிலங்களைப் பின்பற்றி, சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழகத்திலும் இத்தகைய சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற ஆட்சியாளர்கள் தீர்மானித்திருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது. அவ்வாறு செய்யப்பட்டால் வரும் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். அத்தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு  உடனடியாக மறு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். அதிலும் தேர்ச்சியடையாதவர்கள் அதே வகுப்பில் மேலும் ஓராண்டு படிக்க வேண்டியிருக்கும்.  அரசின் இந்த முடிவு இடைநிற்றலை அதிகரிக்கச் செய்வதைத் தவிர வேறு  எந்த நன்மையையும் செய்யாது.

 

சமூகநீதியிலும், எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழக அரசு, இப்படி ஒரு பிற்போக்கான முடிவுக்கு எவ்வாறு வந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் இதேபோன்ற சர்ச்சை ஏற்பட்ட போது, அது குறித்து உடனடியாக விளக்கமளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,‘‘தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே. அவற்றை நம்ப  வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார். அப்படிப்பட்டவர் இப்போது கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்து விட்டு, பொதுத்தேர்வு நடத்தும் முடிவுக்கு எப்படி வந்தார்? என்பது தான் புரியவில்லை.

 

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்குவதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் தமிழகத்தின் கள எதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுக்கின்றனர் என்பது தான் உண்மை. பொருளாதாரத்தில் எவ்வாறு இரு இந்தியாக்கள் உள்ளனவோ அதேபோல் கல்வியிலும் இரு இந்தியாக்கள் உள்ளன. ஒரு இந்தியாவில் மாணவர்கள் மகிழுந்தில் வந்து, அனைத்து வசதிகளும் கொண்ட கல்வி நிறுவனங்களில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில்  படித்து விட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தால் அது தவறில்லை.

 

ஆனால், இரண்டாவது இந்தியாவில் அணிவதற்கு கூட நல்ல ஆடை இல்லாத மாணவர்கள் கிழிந்த ஆடைகளுடன் பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்களே இல்லாத வகுப்பறைகளில் படித்து திரும்புபவர்கள். அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு செல்வதற்கு முன்பாக அவர்கள் ஏதேனும் வேலைக்கு சென்று சிறிது வருவாய் ஈட்டி விட்டோ அல்லது பெற்றோருக்கு ஆதரவாக அவர்கள் செய்யும் தொழிலில் உதவி செய்து விட்டோ தான் பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு கல்வி என்பது இரண்டாம்பட்சம் தான். அப்படிப்பட்டவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி, அதில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்க மறுத்தால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விட்டு, முழுநேரமாக வேறு பணி செய்ய சென்று விடுவார்கள். இதனால் அனைவருக்கும் கல்வி என்ற மத்திய, மாநில அரசுகளின் முழக்கமே அரைகுறையாகிவிடும்.

 

எனவே,  எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக் கூடாது. மாறாக, அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கல்வித்தரத்தை உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்