Skip to main content

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க. பரபரப்பு புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கோவை வாகனப் பேரணியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தி.மு.க.வின் மீது அவதூறுகளைப் பரப்பியதாக நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

அந்தப் புகாரில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 16.03.2024 அன்று மாலை 05.30 மணிக்கு யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய உண்மைகளைத் திரித்து விமர்சித்தார். அதாவது, ‘நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க’ எனப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்