Skip to main content

முதலமைச்சருக்கு இரக்கமில்லை!! மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
mk stalin statement

 

"அனைத்து மாவட்ட மக்களுக்கும் மின்கட்டணச் சலுகை அளிக்க மறுக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள், கரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட்ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையை அதிகரிக்கச் செய்துள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவும் இரக்கமில்லை" "மருத்துவ நிபுணர்கள் 'கோல்டன் பீரியட்' எனச் சொல்லும் இந்தக் காலக்கட்டத்தை; இதுவரையிலான 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாமல், கரோனா பேரழிவில் இருந்து காப்பாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு - ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 90 நாட்கள் ஆகின்றன. கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று நினைத்த மத்திய - மாநில அரசுகள், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிறிதளவும் கைகொடுக்கவில்லை, விரல்களைக் கொண்டு ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லை. மூன்று மாதகால முழு முடக்கம் காரணமாக, தினக்கூலிக்காரர்களுக்கு வேலையில்லை; சிறிய - பெரிய வணிகர்களுக்கு வியாபாரம் இல்லை; தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் இல்லை; கூலி இல்லை; வருமானம் இல்லை; வாழ்வாதாரம் முழுவதையும் மொத்தமாய்த் தொலைத்து இழந்து துன்பங்களால் தவிப்போர் குறித்து இரண்டு அரசுகளும் சிறிதேனும் சிந்தித்ததா என்றால் இல்லை!

கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களை வாழ்விப்பதற்காக, 20 இலட்சம் கோடி ரூபாய்க்குத்  திட்டம் தீட்டியிருப்பதாக மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இதுதொடர்பாக நிதி அமைச்சர் விளக்குவார் என்றார். அவர், ஏதோ கதாகாலட்சேபம் போல, நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுத்த விளக்க உரைகளில், திட்டம் - கடன் - சலுகைகள் இருந்ததே தவிர; தேவைப்படும் நிதி இல்லை. இந்த கரோனா காலத் துயரத்திலிருந்து அவர்கள் மீள்வதற்கு நிவாரண நிதி கொடுக்கச் சொன்னால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல, சுயச் சார்பு இந்தியா என்ற மெகா பெயரில், திட்டங்களைத் தீட்டியது மத்திய அரசு. வாழ்க்கை எப்படியும் கைவசப்படும் என்ற கனவோடு, அதைத் தேடி நெடும்பயணம் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடியில் உதவி என்று அறிவித்துவிட்டு, 50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலைக்கு இவர்களைப் பயன்படுத்தப் போவதாக , அதுவும் 6 மாநிலங்களுக்கு மட்டுமான திட்டத்தைத் தீட்டி,  அவர்களையும் கை கழுவியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அனைத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த பல நாட்களாக தினமும் உயர்த்தி, கரோனா காலத்திலும் மக்களின் சட்டைப்பையில் மிச்சமிருக்கும் பணத்தையும்  பறித்து வருகிறது.

'கரோனா வென்றான்' என்ற பட்டத்துக்கு இப்போதே குதூகலத்துடன் தயாராகி விட்ட முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசைப் பற்றி எதுவும் சொல்லவே வேண்டியதில்லை. மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு சலுகை உண்டா என்றால், அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று  திருப்பிக் கேட்கும் முதலமைச்சர் இவர்! அம்மா உணவக ஊழியர்க்கு ஊக்க ஊதியம் உண்டா என்றால், 'அவர்கள் ஏற்கனவே பார்த்த வேலையைத்தானே பார்க்கிறார்கள்' என்று சொன்னார். ஆம்புலென்ஸ் ஊழியர்களுக்குச் சிறப்பு ஊதியம் உண்டா என்றால், ஆம்புலென்ஸ் 'ஊழியர்கள்னா யாரு' என்று கேட்டார் முதலமைச்சர். இந்த கரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட்ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையையும் ஏற்றிக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி.

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குங்கள் என்று தொடக்கத்திலிருந்தே நான் கோரிக்கை வைத்து வருகிறேன். இரக்கமற்ற முதலமைச்சருடைய இதயம் சற்றும் இறங்கிவரவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் வெளியில் வராமல் இருப்பார்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அதற்கும் இந்த அரசு ஏனோ செவி சாய்க்கவில்லை. பொது முடக்கம் இருந்தால்தானே இந்தக் கோரிக்கைகள் வரும் என்று நினைத்த முதலமைச்சர், ஊரடங்கைத் தளர்வுக்கு மேல் தளர்வு செய்து, அந்தச் சட்டத்தின் சாரத்தையே மண்ணில் கொட்டிவிட்டார். 'அய்யா பழனிசாமி அவர்களே! எங்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களைக் கொடுங்கள்! அதன் பிறகு ஊரடங்கைப் போடுங்கள்' என்று சமூக ஊடகங்களில் பெண்கள் பலர் வீடியோக்களில் பேசி, பதிவிடுவது முதலமைச்சரின் காதில் விழவில்லை.

பொதுமக்களுக்கு மின்கட்டணம் செலுத்த ஜூலை 31 வரை கால அவகாசம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குத் தமிழக அரசு அளித்துள்ள பதிலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 15-ம் தேதிவரை கால அவகாசம் தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டதும், வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பதும் இந்த நான்கு மாவட்டங்கள் மட்டும் தானா? மற்ற மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லையா? மொத்த மாநிலமே முடங்கிக் கிடக்கும்போது, நான்கு மாவட்டத்தை மட்டும் பிரித்து சலுகைகள் அறிவிப்பது எதற்காக? ஒரு ஜனநாயக அரசு, பேரிடர் காலத்தில் மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும் செய்யவில்லை; தர வேண்டிய சலுகைகளையும் வழங்கவில்லை; கரோனாவையும் தடுக்கவில்லை; அதன் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை; மரணம் அடைகின்றவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.  இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையையும் நாளுக்கு நாள் அதிகரிப்பேன், மின்கட்டணத்தையும் செலுத்தக் கட்டாயப் படுத்துவேன் என்று,  மக்கள் மீது நிதிநெருக்கடித் தாக்குதலை முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில், அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போல, ஒரு பள்ளம் இருக்கிறதா?

தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை வீடு விடாகச் சென்று தர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆயிரம் ரூபாயை வீடு வீடாகச் சென்று வழங்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு மக்களை வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். ஒரு தெருவுக்குச் சென்று பொதுவான இடத்தில் நின்று கொண்டு, மக்களை அங்கு வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். இதனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், தனிமனித இடைவெளியில்லாமல் போனதும், இதன் மூலமாகவும் கரோனா பரவலும் நடக்கிறது. அரசாங்கம் ஓர் உத்தரவு போடுகிறது என்றால், அந்த உத்தரவை அரசு அதிகாரிகளே மதிக்கவில்லை என்றால், தட்டிக் கேட்க வேண்டியது அரசாங்கம் தானே? அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?” இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்