Skip to main content

‘நடுவுல கொஞ்சம் ரோட்ட காணோம்..’ - ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

contractor who left half the road not built in Tirupur Corporation

 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய தார் சாலைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், அந்த பகுதியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயன்பாட்டில் இருக்கும் இரண்டு இடங்களில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

 

ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத ஒப்பந்ததாரர், அதனை அப்புறப்படுத்தாமல் கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் தார் சாலையை அமைத்துவிட்டு சென்றுள்ளார். அதே நேரம், சாலை சீரமைப்பு பணிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது. தற்போது அதனைக் காரணம் காட்டி இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனிடையே, கார்கள் நின்ற பகுதியில் இடைவெளி விட்டுவிட்டு தார் சாலை போட்டு சென்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதுமட்டுமின்றி, இந்த சாலை விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. மேலும், நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம் என்ற தலைப்பில் வைரலாக்கி வந்தனர்.

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த சாலை சீரமைப்பு பணிகள் நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது. மேலும், அந்த சமயத்தில் கார் உரிமையாளர் அங்கு இல்லாததால் பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக கார் நிற்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு தார்ச் சாலை அமைத்துள்ளனர். தற்போது, அந்த இடத்தில் விரைவில் சாலை அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில், சம்மந்தப்பட்ட இடத்தில் தார் சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கார்கள் நின்ற இடத்தில் மீண்டும் சாலை அமைத்தனர். தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்