Skip to main content

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
river

 

தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் பிரதான ஆறாகவும், காவிரி டெல்டாவின் ஒட்டுமொத்த பாசன வடிகாலாகவும், விளங்குவது கொள்ளிடம் ஆறு. தமிழக காவிரி பாசன மாவட்டங்களில் பாசன வசதியை தன்னிறைவு செய்யும் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் வெள்ள நீரை விரைந்து கடலில் வடியச்செய்யும் விதமாக திருச்சிக்கு மேற்கே முக்கொம்பு அருகில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மேல் அணைக்கட்டிலிருந்து பிரிந்து உருவாகும் கொள்ளிடம் ஆறு, கல்லணையிலிருந்தும் இனைப்பு பெற்று திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டிணம், கடலூர் ஆகிய மாவட்டங்களின் எல்லை வழியாக 168 கிலோமீட்டர் தூரம் பயணித்து கடலூர் மாவட்டம்  எல்லை அருகே உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் கொடியம்பாளையம் கிரமத்திற்கும், நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு கிராமத்திற்கும் இடையே கடலில் கலக்கிறது.

 

மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி பாசன நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு 108 வது கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டள்ள கீழணையில் தேக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள 1லட்சத்து 34 ஆயிரத்து 304 ஏக்கர்  விளைநிலங்கள் பாசம் பெறுகிறது.

 

இப்பகுதிகளுக்கு கீழணை( அணைக்கரை) மிகப்பெரிய நீராதாரமாக விளங்குகிறது. கீழணையை அடுத்து கொள்ளிடம் ஆற்றில் கடற்கரை முகத்துவாரம் வரை  கதவணைகளோ, தடுப்பணைகளோ இல்லை. இதனால் கீழணையில் திறக்கப்படும் உபரி நீர் தடுப்புகள் ஏது இல்லாமல் நேராக கடலில் கலக்கிறது.

 

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் கடைமடை விவசாயிகளின் பாசன நீராதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும்  விளங்கிய கொள்ளிடம் ஆறு தற்போது உப்பு நீராக மாறி விவசாயிகளை கலங்க செய்துள்ளது.

 

கடந்த காலங்களில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் கிடைக்கக்கூடிய குளிர்கால மழை, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கிடைக்கக்கூடிய கோடைகால மழை, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் கிடைக்கக்கூடிய தென்மேற்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கிடைக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை ஆகிய இயல்பாக மழை பெய்து நீர்நிலை ஆதாரங்கள் நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீராலும் மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் தண்ணீரை வடிய செய்த காலங்களில் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் பாதுக்காப்பாக இருந்தது.

 

ஆனால் தற்போது குளிர் கால மழை, கோடைகால மழை முற்றிலும் பொய்த்து போனதாலும்,தென்மேற்கு பருவமழை, மற்றும் வடகிழக்கு பருவமழை குறைந்ததாலும், தாமதமாக துவங்குவதாலும் போதிய நீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு செல்லாததால் உப்பு நீர் ஊடுறுவலின் தாக்கம் கொள்ளிடம் ஆற்றில் அதிகமாகி நிலத்தடி நீரையும் பாதிக்கச் செய்துள்ளது.

 

மேலும் மழை இல்லாத கால கட்டத்தில் அணைக்கரைக்கு மேலே கொள்ளிடம் ஆற்றுபடுகையில் கிடைக்கும் மழை நீர், மற்றும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசனநீர் கீழணையில் ஒன்பது அடி மட்ட உயரத்திற்கு தேக்கி வைக்கப்படும். அவ்வாறு தேக்கிவைக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை பரவாலாக தேங்கி நிற்கும்.

 

கீழணையில் அதிகபட்சமாக ஒன்பது அடி உயர மட்டத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பரவலாக தேக்கிவைக்கப்படும் தண்ணீர் பூமிக்கடியில் மணல் பரப்பு வரை உட்புகும். பின்னர் பூமியில் உட்புகுந்த தண்ணீர் தேக்கப்பட்டுள்ள தண்ணீரின் அழுத்தத்தின் காரணமாக கீழணையின் கீழ் புறம் ஆற்றின் நீர் வழிதடத்தில் ஒருசில கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் மேலெழும்பி ஊற்றாக உருவெடுத்து சிறிய நீரோடையாக ஓடும். அவ்வாறு ஓடும் ஊற்று நீர் தடையேதும் இல்லாமல் கடலில் கலப்பது. இயற்கையான நடைபெறும் செயலாகும். இச்செயலால் முகத்துவாரத்தில் உப்புநீரின் ஊடுறுவல் தடுத்து நிறுத்தப்படும். ஆற்றில் உப்புநீர் ஊடுறுவல் தடுக்கப்படுவதால் கடலோர சூழல் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீரின் தன்மை மாறுவது தடுக்கப்படும்.

 

தற்போது அணைக்கரையில் பாசனத்திற்கே போதுமான தண்ணீர் வழங்க முடியாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சிறிதளவே தண்ணீரை தேக்கி வத்திருப்பதால் ஊற்று நீரும் அதிகம் கடலுக்கு செல்லுவதில்லை.

 

உப்புநீர் ஊடுறுவல் காரணமாக கொள்ளிடம் ஆற்று பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை மாறுபட்டதால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தும் கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களே காரணம்.

 

கடந்த காலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வழிந்தோடும் மழைநீர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து உருண்டு, திரண்டு பாய்ந்து வரும் போது ஆங்காங்கே இருக்கும் மணல் திட்டுக்களையும் முகத்துவாரத்தில் கொண்டுவந்து சேர்க்கும். அது போல வெள்ளத்தில் அடித்து வரப்படும் மணல் படிப்படியாக ஆற்றுப்படுகையில் படிந்து விடும்.

 

அதனால் ஆற்றின் படுகை மட்டம் ஓரளவு உயர்ந்து இருக்கும். மேலும் கடல் நீர் மட்டம் உயரும் போது ஆற்றுப்படுகையில் கடல் நீர் உட்புகாதவாறு முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டு தடையாக இருக்கும்.

 

கொள்ளிடம் ஆற்றில் கடந்த காலங்களில் 2003, 2016 ஆகிய இரு ஆண்டுகளில் ஒருசொட்டு தண்ணீர் கூட கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லவில்லை. ஆனால் மற்ற ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கடலுக்கு சென்று கலந்ததால் உப்புநீரின் தாக்கம் குறைவாக இருந்தது. 2003 ம் ஆண்டும் உப்புநீரின் தாக்கம் இருந்ததும். 2012 ம் ஆண்டு 23 சதவீதமும், 2013 ம் ஆண்டு 19 சதவீதமும் மழை குறைவாக பெய்ததால் 2014 ம் ஆண்டு கொள்ளிடக்கரையோர நிலத்தடி நீர் உப்பாக மாறியதால் போர்வெல் மூலம் தண்ணீர் இறைத்து குறுவை சாகுபடி செய்த விளைநிலங்களில் பயிர்கள் கருகி காய்ந்து நிலங்களும் வினாகிப்போனது. அது போலவே 2016ம் ஆண்டு மழை பொய்த்து போனதாலும் 2017ம் ஆண்டு 1.55 டி.எம் சி ,குறைந்த அளவே தண்ணீர் கடலுக்கு சென்றதாலும் . உப்புநீரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

 

ஆண்டு தோறும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடியதால் அடித்து செல்லப்பட்ட மணல் முழுவதும் ஆற்றின் மையப்பகுதில் படிந்துள்ளது. ஆனால் ஆற்றின் வலது, மற்றும் இடது கரைகள் வெள்ளத்தின் போது ஏற்பட்ட மண் அரிப்பால் நிர்ணயிக்கப்பட்ட ஆற்றின் படுகை மட்டம் 8 அடி முதல் 24 அடி வரை குறைந்து இருப்பதால் கடல் நீர் மட்டம் உயருகிற போது கடல் நீர் ஆற்றின் இருபுற கரையோரம் மண் அரிப்பால் ஏற்பட்ட நீரோடை வழியாக சுமார் 27 கிலோமிட்டர் தூரம் ஓடிவருவதும், கடல்மட்டம் குறையும் போது குறிப்பிட்ட அளவு கடல்நீர் கடலுக்கு திரும்புவதும், பெரும்பான்மையான கடல்நீர் நீரோடையில் ஆழம் அதிகமுள்ள பள்ளங்களில் தேங்கிவிடுவதும் வழக்கம்.

 

கரையோரம் தேங்கியுள்ள உப்புதண்ணீர் ஆற்று மணல் மூலமாகவும், பக்கவாட்டு கரை மண்ணின் வழியாக நிலப்பரப்பில் ஊடுறுவி நிலத்தடி நீரை பாழ் படுத்துகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் இடது புறக்கரையோரம் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வட்டங்களுக்கு உட்பட்ட மகேந்திரப்பள்ளி, அளக்குடி, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, திட்டுப்படுகை, சந்தப்படுகை, கொள்ளிடம், மாதிரவேளூர், சென்னிய நல்லூர், பனங்காட்டாங்குடி சித்தமல்லி உள்ளிட்ட 40 கிராமங்களிலும் ஆற்றின் வலது புறக்கரையோரம் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டங்களுக்கு உட்பட்ட குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், பெராம்பட்டு, சிவபுரி, திட்டுக்காட்டூர், வேளக்குடி, வல்லம்படுகை, வடக்குமாங்குடி, தெற்குமாங்குடி, எருக்கன்காட்டுபடுகை, கருப்பூர், நளம்புத்தூர், முள்ளங்குடி, பருத்திக்குடி, வெள்ளூர், அரசூர், குருவாடி,புளியங்குடி, தில்லைநாயகபுரம் உள்ளிட்ட 45 கிராமங்களிலும் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலையும், பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் நல்ல தண்ணீர் கிடக்காத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் கொள்ளிடம் ஆற்றில் நாகை மாவட்ட மக்களுக்கான சித்தமல்லி, இளந்தோப்பு, மணல்மேடு, கடலங்குடி மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கான நளன்புத்தூர், தில்லைநாயகபுரம், எய்யலூர் ஆகிய இடங்களில் செயல்படும் கூட்டுகுடிநீர் திட்டங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

 விவசாயிகள் தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியதால் கடந்த 2014ம் ஆண்டு மயிலாடுதுறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மூலம் ஆய்வு செய்து கொள்ளிட்டம் ஆற்றில்  சந்தப்படுகை கிராமத்திற்கு உட்பட்ட திருமைலாடி என்ற இடத்தில் தடுப்பணை அமைக்க ரூ 1.12 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம்  விவசாயிகள் வலியுறுத்தியதால் தற்போது கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் மூலம் ஆய்வு செய்து தரைமட்ட தடுப்பணை அமைக்க 2.50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்க எதிர்வரும் பருவமழை காலம் வரை நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொறுட்டு ஆற்றில் உட்புகும் கடல்நீரை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் தரை மட்ட தடுப்பணை அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே தமிழக அரசு தொலைநோக்கு பார்வையோடு, தாமதமின்றி நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொள்ளிடம் ஆற்றில் எய்யலூர்- ஆதனூர் இடையே ரூ400 கோடியில் கதவணை கட்ட 110 விதியின் கீழ் அறிவித்தார். இதுவரை அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த அடிப்படை பணிகளையும் எடபாடி அரசு செய்யாமல் உள்ளது. எனவே நீரின் அருமை கருதி விரைவில் தடுப்பணை,கதவணை அமைக்க வேண்டும்  என்றார் டெல்டா நீராதர பாதுகாப்பு மையத்தின் மாநில தலைவர் கிள்ளைரவீந்திரன்.

 

இது குறித்து ராதா வாய்க்கால் பான விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகி கூறுகையில் தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றில்  உப்பு தண்ணீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டிட வேண்டும். இதன் மூலம் கரையோர விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். கரையோர பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவும் இது வழிவகை செய்யும் என்றார். 

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்