Skip to main content

சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, சென்னை பல்கலைக் கழக மாணவ மாணவியர் வகுப்பு புறக்கணிப்புப் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இளங்கலை மற்றும் முதுகலைப் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை, சென்னைப் பல்கலைக் கழகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 30-ல் இருந்து 50 சதம்வரை கிடுகிடுவென உயர்த்தியிருக்கிறது.
 

chennai university students protest



பல்கலைக் கழக நிர்வாகத்தின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும், தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இது ஒட்டுமொத்த மாணவர்கள் தரப்பையும் பரபரப்பாக்கி வருகிறது.


-சூர்யா
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

சென்னை பல்கலைக்கழகத்தை தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Tamil Nadu government should take action on Chennai University

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, “தமிழ்நாடு அரசு மௌனத்தைக் கலைத்து, சென்னைப் பல்கலைக் கழகத்தைக் காக்க வேண்டும். 165 ஆண்டுகள் பழமையான தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் எனும் பெருமைக்குரிய சென்னைப் பல்கலைக்கழகம் பொது நிதியில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகமாக தொடர வேண்டும். முதல் அமைச்சர் உடனடியாக தலையிட்டு நிதிச் சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; “சென்னைப் பல்கலைக்கழகத்தில் சில நியமனங்களில், பதவி உயர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி அரசு நிதி வழங்குதல் கடந்த பத்தாண்டுகளில் பெரும் அளவு குறைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் தமிழ்நாடு அரசு. அந்த வகையில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருந்தால் அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. தேவைப்படுமேயானால் சட்டப் பேரவையில் விவாதித்து உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யலாம்.

அத்தகைய நடவடிக்கைகளை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாமல், பல்கலைக் கழகம் செயல்படுவதற்கு அரசு வழங்க வேண்டிய நிதியை பெரும் அளவு குறைத்து வந்துள்ளது. இதன் விளைவாக, பென்ஷன் நிதி உள்ளிட்ட பலவகையான நிதியை ஆசிரியர்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. அரசு தர வேண்டிய நிதியை அரசு தந்திருந்தால் இந்த நிதி நிர்வாக சிக்கல் பல்கலைக் கழகத்திற்கு ஏற்பட்டிருக்காது.

ஆராய்ச்சிக்கு தரப்பட்ட நிதியை சம்பளத்திற்கு வழங்கியதாக தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டி ‘நிர்வாக சீர்கேடு’ என்று வகைப்படுத்தி அரசு நிதி வழங்குவதற்கு தணிக்கை அறிக்கை ஆட்சேபணை தெரிவித்துள்ளது. இதை சரிசெய்ய அரசு முற்படாமல், இதைக் காரணம் காட்டி அரசு தனது நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டுள்ளது.

இதன் தொடர் விளைவாக, அரசின் ஒதுக்கீடு பல்கலைக் கழகத்தின் செலவுகளின் பாதிக்குமேல் இல்லை என்பதால் வருமான வரித்துறை தனது சட்டத்தின்படி பல்கலைக்கழகத்தை, தனியார் பல்கலைக்கழகமாக கருதி வரி விதித்துள்ளது. ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், ஊதியம் தருவதற்கும் நிதி இல்லாத சூழலில் பல்கலைக்கழகம் எவ்வாறு வரி செலுத்த இயலும்? வரி செலுத்தாத காரணத்தால் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்த சூழல் தொடரும் என்றால் பல்கலைக் கழகம் சீர்குலைந்து, ஒன்றிய அரசு தலையிடும் சூழல் உருவாகலாம். பல்கலைக்கழகம் தனியார் கைவசம் செல்லும் சூழல் உருவாகலாம். சமூகநீதியின் அடிப்படையில் அனைவருக்கும் உயர் கல்வி வழங்கி வரும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்தை சீர்குலைக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது.

பத்தாண்டு நிர்வாக சீர்கேட்டைச் சரி செய்யத்தான்  2021ம் ஆண்டில் ஆட்சியை மக்கள் மாற்றினார்கள். ஆட்சி மாறிய பின்னர் கூட பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டைச் சரி செய்ய அரசு முற்படத் தவறுவது மிகவும் வேதனைக்குரியது. முதல் அமைச்சர் பார்வைக்கு இந்த சிக்கல் கொண்டு செல்லப்பட்டதா? தமிழ்நாடு அமைச்சரவை பல்கலைக்கழகத்தின் சிக்கல் குறித்து விவாதித்ததா? 

குழந்தையை பெற்றெடுத்த தாயும், தந்தையும் குழந்தை சரியாக நடந்துக் கொள்ளவில்லை என்பதற்காக, குழந்தையை பராமரிக்க முடியாது என்று சொல்லத் துணிந்தால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ, அதே போல்தான், பல்கலைக் கழகத்தின் உரிமையாளரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டுகளாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு தேவையான நிதியை உடனடியாக வழங்கி சென்னைப் பல்கலைக்கழகத்தை காத்திட முன்வர வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யவும், பல்கலைக்கழகத்தை வலுப்படுத்தவும், சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகமாக நீடித்து நிலைத்திட உரிய பரிந்துரைகளை வழங்கிட சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மேனாள் பேராசிரியர்கள், மேனாள் துணை வேந்தர்கள் உள்ளிட்ட பொறுப்பு மிக்க ஆளுமைகளைக் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும். 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகி உள்ள சிக்கல் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திறமைக்கு விடுக்கப்பட்ட சவால். இந்தச் சவாலை திறனுடன் எதிர்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு அரசைக் கோருகிறது. 

இயற்பியல் அறிஞர் சர். சி. வி. இராமன், கணித மேதை ராமானுஜன் உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தை காத்திட சென்னைப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.