Skip to main content

''அந்த பைக்கை எரியுங்கள்... சேனலை முடக்குங்கள்''- டிடிஎஃப்க்கு குட்டு மேல் குட்டு வைத்த நீதிமன்றம்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

 "Burn that bike...shut down the channel"-Court slams TDF

 

மூன்றாவது முறையாக டிடிஎஃப் வாசன் தொடர்ந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

 

அண்மையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் பிரபல பைக் ரேஸ் யுடியூபர் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்றபோது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இரண்டு முறையும் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் 'நான் அப்பாவி. எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  டிடிஎஃப் வாசனை பின் தொடரும் 45 லட்சம் சிறார்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதிலும், அதற்காக பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர் என போலீசார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, சிறையிலேயே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்