Skip to main content

'கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள்’ - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Announcement by the Department of Hindu Religious Affairs regarding First Aid Medical Centers in Temples

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இன்று (20/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகின்றது. முக்கியமாக அறம் சார்ந்த பணிகள் பள்ளி, கல்லூரிகள், சமயம் சார்ந்த பள்ளிகள், கருணை இல்லங்கள், அன்னதானக் கூடங்கள், சமய நூலகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர்- ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில், நாதஸ்வர இசைப்பள்ளிகள் போன்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றது. 

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோவில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மையங்கள் ரூபாய் 10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார். 

 

அந்த அறிவிப்பின் படி, பழனி  தண்டாயுதசுவாமி கோவில், சமயபுரம்  மாரியம்மன் கோவில், திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை  அருணாச்சலேசுவரர் கோவில், ராமேஸ்வரம்  இராமநாதசுவாமி கோவில், திருவரங்கம்  அரங்கநாதசுவாமி கோவில், மருதமலை  சுப்பிரமணிய சுவாமி கோவில், சோளிங்கர்  இலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மேல்மலையனூர்  அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய கோவில்களில் முதலுதவி மையங்கள் தொடங்க முதல்கட்ட ஆரம்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் இரண்டு மருத்துவர், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள ஒப்பந்த கால அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்