Skip to main content

ஈரோட்டில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
13 kg of cannabis seized in Erode and 3 arrested

தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு - பள்ளிப்பாளையம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் நேற்றிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த சிவசக்தி(22) என்பவரைப் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர் கொடுத்தத் தகவலின் பேரில் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன்(40) மற்றும் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அந்தப் பையைத் திறந்து பார்த்த போது சுமார் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பையை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் அதை  ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்