Skip to main content

சசிகலாவுக்கு எதிராக சண்முகம் புகார்! பின்னணி என்ன?

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

Why Shanmugam complains against Sasikala

 

அதிமுகவை விரைவில் கைப்பற்றுவேன் என்கிற ரீதியில் அதிமுக - அமமுக கட்சி நிர்வாகிகளிடம் சசிகலா பேசி வெளியான ஆடியோக்களுக்கு, எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக பதிலடி தந்துவருகின்றனர்.

 

அதிமுகவில் சசிகலா நுழையவே முடியாது என ஆவேசம் காட்டும் சி.வி. சண்முகம், ஒரு படி மேலே போய், சசிகலாவின் தூண்டுதலில் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சசிகலா உள்ளிட்ட பலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகார் மனு அதிமுக மற்றும் அமமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால் அதிமுகவில் ஏகத்துக்கும் டென்ஷன்!

 

இந்த நிலையில், சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் பின்னணியில் வேறு ஒரு மர்மம் மறைந்துள்ளது என விவரிக்கின்ற சசிகலாவின் ஆதரவாளரும் அமமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான என். வைத்தியநாதன், “முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமைச்சர் என்கிற முறையில் அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் சி.வி. சண்முகம் தோற்றுப்போனார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் வீழ்ந்துபோனது. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திமுக அரசு திரும்பப் பெறவிருக்கிறது. இதனையறிந்த அவர், தனது போலீஸ் பாதுகாப்பை திமுக அரசு எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே தனக்கு மிரட்டல் இருப்பதாக புகார் கொடுக்கிறார். இதுதான் பின்னணி.

 

Why Shanmugam complains against Sasikala

 

சின்னம்மா சசிகலாவைப் பற்றி பேச இவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அதிமுகவுக்குத் துரோகம் செய்ததால்தான் சண்முகத்தின் அப்பா வேணுகோபாலை கட்சியிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர். சசிகலா இல்லையென்றால் அதிமுகவில் சண்முகத்துக்கு முகவரியே கிடையாது. கட்சியில் மா.செ. பதவியையும், அமைச்சர் பதவியையும் ஜெயலலிதாவிடம் சொல்லி சண்முகத்துக்கு வாங்கிக் கொடுத்தவர் சசிகலாதான். அதிமுகவையும் சண்முகத்தையும் அறிந்த மூத்த தலைவர்கள் பலருக்கும் இது தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சண்முகத்தை விழுப்புரம் மா.செ.வாக நியமித்தவர் சசிகலா. அவர் நியமித்த அந்தப் பதவியில்தான் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறார் சி.வி. சண்முகம். சசிகலாவை எதிர்க்கிற இவர், அவர் கொடுத்த பதவியைத் தூக்கி எறிய வேண்டியதுதானே? அவரது அப்பாவைப் போலவே, தன்னை வளர்த்துவிட்டவர்களுக்குத் துரோகம் செய்வது சண்முகத்துக்கும் கைவந்த கலை.

 

சிறைக்குச் செல்லும்போது, அதிமுக ஆட்சியையும் கட்சியையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் தந்துவிட்டு சென்றார் சசிகலா. அவர் திரும்பி வந்ததும் அவரிடம் ஒப்படைப்பதுதானே முறை? எடப்பாடி செய்தாரா? கோவிலின் வாசலில் காலணியைக் கழட்டி விட்டுட்டு உள்ளே செல்கிறோம். மீண்டும் திரும்பி வந்ததும் காலணியைப் பார்த்துக்கொண்டதற்காக அவருக்கு 10 ரூபாயைக் கொடுக்கிறோம். அவரும் காலணியைத் திருப்பித் தந்துவிடுகிறார். மாறாக, காலணியை நான்தானே பார்த்துக்கொண்டேன். அதனால் காலணி எனக்குத்தான் சொந்தம் என கடைக்காரர் கொண்டாடினால் சும்மா இருக்க முடியுமா? அது எப்படி அநியாயமோ அப்படித்தான் அதிமுக எனக்கு சொந்தம் என சொல்லி திரிந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால், விரைவில் அதிமுகவைக் கைப்பற்றுவார் சின்னம்மா சசிகலா” என்கிறார் அதிரடியாக.

 

 

சார்ந்த செய்திகள்