Skip to main content

ஓ.பி.எஸ் vs இ.பி.எஸ்; உச்சக்கட்ட பரபரப்பில் சிவகங்கை!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

O. Panneerselvam and Edappadi Palaniswami in Sivagangai

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு அதிமுகவில் இரட்டை தலைமை தொடர்ந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. 

 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவே, சமீபத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

 

இந்த நிலையில் சிவகங்கையில் ஓ. பன்னீர் செல்வம் அணியும், பழனிசாமி அணியும் இன்று ஒரே நாளில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இரு தரப்பில் இருந்தும் இன்று ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக கூறி காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரினர். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து இரு தரப்பினரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆர்ப்பாட்டத்தால் எந்த வித சட்டஓழுங்கு பிரச்சனையும் ஏற்படாது என்று மனுதாரர்கள் சிவகங்கை டி.எஸ்.பியிடம் உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து, ஓ.பி.எஸ் தரப்பினர் காலை 10.30. முதல் 12.30 வரை அரண்மனை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், பழனிசாமி தரப்பு மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறை அனுமதி வழங்கியது.

 

இதனையொட்டி இருதரப்பினரும் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமியை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள், பேனர்கள் வைத்துள்ளனர். இதனிடையே பன்னீர்செல்வம் தரப்பினர் பழனிசாமி வருகையைக் கண்டித்து பல இடங்களில் ஏகப்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரு தலைவர்களும் ஒரே நாளில் சிவகங்கைக்கு வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்