Skip to main content

வேட்புமனு தாக்கல் முதல் பரப்புரை வரை வித்தியாசம் காட்டும் ம.நீ.ம வேட்பாளர்....

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

mnm candidate veerasakthi creates awareness about body donation

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்துவருகின்றன. இதில், 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், பல்வேறு கட்சிகளும் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

 

அந்தவகையில், துடிப்பு மிக்க இளைஞராகவும் தான் சார்ந்திருக்கிற பகுதி மக்களுக்கு செயலாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றிவரும் வீரசக்தி, அக்கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்கையில், பழைய சம்பிரதாயங்களை உடைக்கும் வகையில், கைம்பெண்ணான தனது தாயை அழைத்துவந்து முன்னிறுத்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

 

பொதுவாக, சாஸ்திர, சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டே பெரும்பாலான கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது அனைத்துத் தேர்தல் தொடர்பான காரியங்களையும் செய்வது வழக்கம். ஆனால், இந்த சென்டிமென்டை உடைக்கும் வகையில், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார் வீரசக்தி. கணவரை இழந்தவரான தனது தாயை முன்னிறுத்தி, சம்பிரதாயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, அம்மாவின் பிள்ளை என்ற அடையாளத்தைப் பதியவைத்தார்.

 

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கமலக்கண்ணனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஆன்லைலில் தனது உடல் தானத்தைப் பதிவு செய்த பின்னர் பாலக்கரை அண்ணா சிலை அருகிலிருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாகச் சென்றார். பின்னர், அப்பகுதியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், தனது தாய் மரகதவள்ளி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோருடன் சென்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல, இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதும், மக்களிடையே உடல்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்