Skip to main content

“எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன?” - ஜோதிமணி எம்.பி.

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Jothimani M.P says What is the mystery behind the Governor's denial of permission to investigate M.R.Vijayabaskar?

 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அவரது பதவிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டிருந்தார். இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தற்போதைய தமிழக அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. ஆனால், இதுவரையிலும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

 

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில், அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்தபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  கடந்த 20 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிமுகவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அனுமதி கேட்டபோது கோப்புகள் வரவில்லை என்று கூறிவிட்டு தற்போது வந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரு ஆளுநர் இவ்வளவு அப்பட்டமாக பொய் சொல்வதன் அவசியம் என்ன? இதில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா மீதான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி தர மறுக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

 

இந்த மர்மத்துக்குப் பின்னால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்று கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கரூரில் மட்டும் அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது போல தோன்றுகிறது. தமிழகம் முழுவதும் பல டீலிங் நடத்தும் வசூல் ராஜாவாக அண்ணாமலை இருக்கிறார். இதேபோன்ற டீலிங்கில் தான் விஜயபாஸ்கருக்கும் ஆளுநருக்கும் இடையே அண்ணாமலை இருந்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு பின்னால் இருக்கும் டீலிங் என்ன என்பதை விளக்க வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்