Skip to main content

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க மறுத்த எடப்பாடி பழனிசாமி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

edapadi palanisamy refused to stay at delhi tamilnadu house

 

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை நல்கும் வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என இருபது நாடுகள் இதன் உறுப்பினர்களாக உள்ளன. ஜி20 அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், டெல்லியில்  2023  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அதன் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு அதற்கான முன்னேற்பாடு பணிகளை தற்போதிருந்தே தொடங்கியுள்ளது.

 

இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நாட்டின் பல பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்த முடிவு செய்து, அது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு டெல்லியில் நேற்று நடத்தியது. கூட்டத்தின் போது மாநாட்டின் முக்கிய அம்சமாக,  தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரிவுகளில் ஜி20 கூட்டமைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில், ஜி20 உச்சி  மாநாடு திட்டங்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜூன  கார்கே மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் நேற்று டெல்லி சென்றிருந்தனர். பொதுவாக அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் மக்கள் பிரதிநிதிகள், அரசு செயலாளர்கள், மற்ற உயர் அதிகாரிகள் அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது வழக்கம். தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு தாங்காமல் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு என  தனியாக அறைகள் இருக்கும் போது, அவர் அங்கு தாங்காமல் தனியார் விடுதியில் தங்கி இருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்