திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரை முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கு, சேலம் கிழக்கு மாவட்டத்தில் உடன்பிறப்புகள் கொதித்து எழ, பத்தே நாளில், அவரை நீக்கிவிட்டு புதியவரை நியமித்திருக்கிறது அக்கட்சி தலைமை.
சேலம் மாவட்டத்தில் திமுக அமைப்பு ரீதியாக சேலம் மத்தி, கிழக்கு, மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில், பஞ்சாயத்துகளில் ஆளுங்கட்சியை வீழ்த்தி பரவலாக வெற்றி பெற்ற திமுக, 20 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியாமல் கோட்டை விட்டது.
குறிப்பாக, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 'வாஷ் அவுட்' ஆனது திமுக. திமுக வலுவாக இருக்கும் ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய ஒன்றியங்களில்கூட தலைவர் பதவியை நழுவவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, சேலம் மாவட்டத் திமுகவில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதுவரை சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த வீரபாண்டி ராஜா தடாலடியாக நீக்கப்பட்டார். அந்தப் பதவியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் எம்.பி., டி.எம்.செல்வகணபதியை நியமித்தது அக்கட்சி தலைமை.
இது ஒருபுறம் இருக்க, சேலம் கிழக்கு மாவட்டத்தில் சில நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனங்களில் உள்குத்துகள் இருப்பதாக உடன்பிறப்புகளிடையே தொடர்ந்து சலசலப்புகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. அதன் தொடர்ச்சியாக, மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, வி.கே.சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனம், பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுகவில் பெரும் புகைச்சலை உருவாக்கியதுடன், ஒட்டுமொத்த திமுகவினரும் மாவட்டத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அளவுக்கும் சென்றது.
ஏனெனில், சீனிவாசன், திமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்கிறார்கள். அவர், வீர வன்னியர் பேரவை என்ற சாதி அமைப்பை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். கட்சியினர் மட்டுமின்றி சீனிவாசனே குடிபோதையில், தான் வீர வன்னியர் பேரவையைச் சேர்ந்தவர் என்று கூறி, திமுகவை விமர்சிக்கும் காணொலி பதிவு ஒன்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.
இதையடுத்து, மல்லூர் பேரூர் திமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் முறையிட்டனர். இந்த நிலையில்தான் சீனிவாசன், குடும்ப சூழ்நிலை காரணமாக பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாகவும், அவருக்கு பதிலாக மல்லூர் பேரூர்க்கழக புதிய பொறுப்பாளராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், வியாழக்கிழமை (ஜூலை 30) முரசொலியில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது, கட்சி தலைமை.
பத்தே நாளில் பதவி... நீக்கம்... நியமனம்... என அடுத்தடுத்து கச்சேரிகள் நடந்ததன் பின்னணி குறித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.
சுரேந்திரன்
''சீனிவாசன் நியமிக்கப்படுவதற்கு முன்பு, மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக விஜயகுமார் என்பவர் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்து விட்டதால், அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். அதனால், அவர் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தார். இது தொடர்பாக அவரிடம் கருத்துக்கூட கேட்காமல் திடீரென்று அவரை நீக்கிவிட்டு சீனிவாசன் என்பவரை கட்சி தலைமை நியமித்துள்ளது.
மல்லூர் பேரூர்க்கழக முன்னாள் செயலாளர் சுரேந்திரன், கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். அதனால் அவர் பேரூர்க் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு, தனது ஆதரவாளரான விஜயகுமாருக்கு அந்த பதவியை விட்டுக்கொடுத்தார். எனினும், கடந்த முறை சுரேந்திரனுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படவில்லை.
கட்சிக்காக எப்போதும் சின்சியராக உழைக்கக் கூடியவர் மட்டுமின்றி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த ஒரு வம்புதும்புக்கும் போகாதவர். அவர், சேலம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் எம்எல்ஏவின் ஆதரவாளர் என்பதால், அவரை கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். அவர் பொறுப்பில் இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் சீட் கேட்டு, குடைச்சல் கொடுப்பார் என 'சிலர்' கருதுகின்றனர்.
அதனால்தான் சுரேந்திரனுக்கு 'செக்' வைக்கும் உள்நோக்கத்துடன் அவருடைய ஆதரவாளரான விஜயகுமாரை சொல்லாமல் கொள்ளாமல் மாவட்டத் தலைமை பரிந்துரை செய்து, அவரை நீக்கம் செய்ய வைத்திருக்கிறது. பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பரிந்துரையின்பேரில், மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத சீனிவாசனை நியமிக்க வைத்துள்ளனர். தெரிந்தே கட்சி தலைமையை ஏமாற்றியுள்ளதாக கருதுகிறோம்.
சீனிவாசன் நியமனம் குறித்து, கழக நிர்வாகிகள் பலர் ஒரு வாரத்திற்கு முன்பு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அதன்பிறகே, தற்போது சீனிவாசன் நீக்கப்பட்டு, அந்தப் பதவியில் சுரேந்திரனை புதிதாக நியமித்து தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்,'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.
எஸ்.ஆர்.சிவலிங்கம்
இது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் கேட்டபோது, ''பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பரிந்துரை கடிதம் கொடுத்ததன் பேரில்தான் மல்லூர் பேரூர் கழகத்திற்கு பொறுப்பாளராக சீனிவாசன் என்பவரை நியமிக்கக்கோரி கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினேன். நானாக எதையும் செய்யவில்லை.
இதுகுறித்து ஆட்சேபணைகள் வந்த உடனேயே, சீனிவாசனை நீக்கிவிட்டு புதியவரை நியமித்து விடலாம் என கட்சிக்காரர்களிடம் அப்போதே சொல்லி விட்டேன். கட்சியை வளர்ப்பதும், வரும் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து, தளபதியை முதல்வராக்குவதும்தான் என்னுடைய ஒரே லட்சியம்,'' என்றார்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர், கட்சி கூட்டங்களில் பேசுகையில், ''கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த இயக்கம், திமுக. அவர்களின் வளர்ச்சிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் எப்போதும் உதவியாக இருக்க வேண்டும்,'' எனக்குறிப்பிடுவார். ஆனால், அண்மைக் காலங்களாக உழைக்கும் தொண்டர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை என புலம்புகின்றனர் சேலம் மாவட்ட திமுகவினர். மேலும், 71 ஆண்டு கால திமுக வரலாற்றில், அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவருக்கு முக்கிய பதவி கொடுத்திருக்கும் விந்தையும் இப்போதுதான் நடந்திருக்கிறது என்றும் குமுறுகிறார்கள் கழக உடன்பிறப்புகள்.