கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், 'பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமருக்கு அமித்ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்' என்றார்.
இந்த பேச்சு வைரலான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாஜகவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், 'ஆ.ராசா சொல்கிறார் தனிநாடு கேட்போம் என்று, ஆ.ராசாவுக்கு இருக்கும் ஆசை நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் இல்லாமலா போய்விடும். நான் கேட்பேன் தமிழ்நாட்டை இரண்டா பிரிங்க'னு கேட்பேன். 234 தொகுதி இருக்கு 117... 117... ஆ பிரிப்போம். நாங்களும் இரண்டு இடத்திலும் முதலமைச்சராக வந்துவிடுவோமில்ல. தமிழ்நாட்டின் தென் பகுதியிலும் முதல்வராக வந்துவிடுவோம், வட பகுதியிலும் முதல்வராக வந்துவிடுவோம். பாண்டிய நாடு, பல்லவ நாடு... எதையோ பிடிக்கப்போய் எதையோ பிடிச்சுக்கிட்டு வம்பா முழிக்காதீங்க... அதை செய்யமுடியாது என நினைக்காதீர்கள். செய்ய கூடிய இடத்தில் தான் நாங்க இருக்கோம். பிரதமர் மோடி நினைத்தால் முடியும்'' என்றார்.
இந்த பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் மாநிலத்தைத் துண்டாடத் துணிந்து விட்டது பாஜக. பாஜக ஆட்சியைக் கைப்பற்ற ஜனநாயக விரோத யுக்திகளைக் கையாண்டு வருகிறது''எனத் தெரிவித்துள்ளார்.