புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “ஜிப்மர் புதுச்சேரி மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் முழுமையான சேவையை ஆற்றுகிறது. வெளி மாநிலங்கள் வெளி நாடுகளுக்குச் சென்று பெறும் சிகிச்சையை மிகச்சிறந்த மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள். கொரோனா நேரத்தில் அவர்கள் அளித்த சிகிச்சையை யாரும் மறுக்க முடியாது. 70% மக்கள் தமிழகத்தில் இருந்துதான் சேவை செய்கிறார்கள். குறைசொல்ல முடியாத அளவிற்கு மக்கள் அங்கு பணி செய்கிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம் செய்து பொதுமக்களுக்கும் அங்கு வரும் நோயாளிகளுக்கும் இடையூறு செய்வது கடுமையாகக் கண்டிக்கக்கூடியது.
ஏழை மக்களுக்கு கட்டணம் கிடையாது. சென்னை, பெங்களூர், மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்று மேற்கொள்ளும் பரிசோதனைகள் அனைத்தும் இன்று ஒரு கூரையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் பாராட்டுங்கள். மும்பைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தால், பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் கொண்டு வர ஏறத்தாழ 10 ஆயிரம் ஆகும். ஏழை மக்களுக்கு அதற்குண்டான பணம் வாங்கப்படுவதில்லை. தரமுடியும் என்ற இடத்தில் இருக்கும் மக்களிடம் மட்டும் தான் பணம் வாங்கப்படுகிறது. ஏழை மக்களிடம் பணம் வாங்கியதாகச் சொல்லப்படுவது பொய்யான செய்தி. அப்படி உண்மையாக இருந்தால் என்னிடம் சொல்லச் சொல்லுங்கள் நான் திருப்பித் தரச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று புதுச்சேரியில் போராட்டம் நடத்துகிறார்கள். முதலில் எம்.பிக்களை அவர்களது சொந்த ஊர்களில் இருக்கச் சொல்லுங்கள். விழுப்புரம் எம்.பி. ஏன் இங்கு இருக்கிறார். அவருக்கு முகவரி என்ன புதுச்சேரியா? ஜிப்மர் மிக நன்றாக நடந்துகொண்டுள்ளது. என்ன பிரச்சனை என்றாலும் உடனடியாக இயக்குநரை நான் தொடர்பு கொள்கிறேன். குறை இருந்தால் சொல்லுங்கள். அதைச் சரி செய்யலாம். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆர்ப்பாட்டம் செய்யும் வேலையை தமிழ்நாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.