Skip to main content

தமிழக அரசிடமிருந்து தப்பிக்க இடம் மாறிய அமித்ஷா! பரபரப்பு பின்னணி! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

AmitSha Avadi visit secrete

 

அரசுமுறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு செல்வதற்காக 23-ந்தேதி இரவு சென்னை வந்தார். அவரது வருகையின்போது நடந்துள்ள இரண்டு சம்பவங்கள்தான் மாநில உளவுத்துறையினரால் உற்று நோக்கப்பட்டிருக்கின்றன.

 

கவர்னர் மாளிகையில் தங்காமல் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் அமித்ஷா தங்கினார். இது குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி பயணம் முடிவானதுமே, டெல்லியிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடி சென்னைக்கு வராமல் புதுச்சேரிக்கு செல்லலாம் என்றுதான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெங்களூர் பயணம் கட் ஆனது. காரணம், தமிழக அரசியல் சூழல், ஆட்சி சூழல் இரண்டையும் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதிக்க நினைத்தார் அமித்ஷா. சென்னையில் முதல்நாள் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் புதுச்சேரி செல்ல தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் ராஜ்பவனில் அமித்ஷா தங்குவது எனவும், அன்றைய தினம் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் ஆலோசிக்கவும் முடிவானது.


இதனை அறிந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஒன்றிய உள்துறைக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளனர். அதில், ’தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலும், மாநில காவல்துறை மற்றும் மாநில உளவுத் துறையின் பாதுகாப்பு கண்காணிப்பிலும் சென்னை ராஜ்பவன் இருக்கிறது. அதனால் அமித்ஷாவை மாநில உளவுத்துறையின் மூலம் தமிழக அரசு வேவு பார்க்கலாம். ராஜ்பவனில் தங்குவதை தவிர்க்கவும்’ என தகவல் தந்துள்ளனர். அதன்பிறகே, ராஜ்பவனை தவிர்த்து விட்டு மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் தங்குவது என முடிவானது” என்று ஆவடி ரகசியத்தை சுட்டிக்காட்டினார்கள்.


சென்னை விமானநிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அமித்ஷாவை வரவேற்றனர். சால்வை கொடுத்த கராத்தே தியாகராஜனுடன் கையைப் பிடித்துக்கொண்டு அவர் பேசியதை சொன்ன விசயங்களை, உன்னிப்பாக கவனித்தார் அமித்ஷா.


இதனையடுத்து, அமித்ஷாவின் காரில் அண்ணாமலையும் சி.டி.ரவியும், அதற்கடுத்த காரில் கேசவ விநாயகம், அமைச்சர் முருகன், சுதாகர் ரெட்டியும் பயணித்தனர். ஆவடிக்கு சென்ற அமித்ஷா, விருந்தினர் மாளிகையில் மேற்கண்ட ஐவருடன் தி.மு.க. ஆட்சி குறித்து 2 மணி நேரம் விவாதித்துள்ளார். அப்போது தி.மு.க. அரசுக்கு எதிரான பல டாகுமெண்ட்டுகளை அமித் ஷாவிடம் காட்டி விவரித்திருக்கிறார் அண்ணாமலை.

 

 

சார்ந்த செய்திகள்