Skip to main content

சாக்குப்பையில் பெண்ணின் சடலம்... நண்பனை கொலைக்காரனாக்கிய ஆசை! 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

woman passes away incident made by friend

 

புதுச்சேரி வில்லியனூர் கனுவாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலபாஸ்கர் என்பவரது மனைவி ஆரோக்கியமேரி (31). இவர்களுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆரோக்கியமேரி கடந்த 10 ஆண்டுகளாக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றிவந்துள்ளார். இவர், கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு  திரும்பவில்லை என அவரது உறவினர்கள் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆரோக்கியமேரியை தேடிவந்தனர்.

 

இந்நிலையில் ஆரோக்கியமேரியின் உறவினர்கள், அவருடன் மருத்துவமனையில் பணிபுரியும் அரியூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ரமேஷ் என்பவர்தான் ஆரோக்கியமேரியை கடத்தியுள்ளார். அதனால் அவரை உடனடியாக கைதுசெய்து விசாரித்தால் ஆரோக்கியமேரி கிடைத்துவிடுவார் என்று கூறி நேற்று முன்தினம் (22.08.2021) இரவு வில்லியனூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று விடியற்காலை ரமேஷை மேட்டுப்பாளையம் பகுதியில் கைதுசெய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆரோக்கியமேரியை கொலை செய்து அவரது சடலத்தை தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தில் உள்ள அடர்ந்த பகுதியில் போட்டுவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.

 

woman passes away incident made by friend

 

அதனையடுத்து அங்கு சென்ற போலீசார், சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆரோக்கியமேரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து ரமேஷிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணையில், சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ஆரோக்கியமேரி பணி முடிந்து தனது தோழியுடன் வீட்டுக்குத் திரும்பிவந்துள்ளார். அவரது தோழி கோட்டக்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், ஆரோக்கியமேரி மட்டும் தனியாக தனது பைக்கில் வந்துள்ளார். இதனிடயே அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ரமேஷ் பணி முடிந்து அருகில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவ்வாறு வரும்போது இன்றைக்கு எப்படியாவது ஆரோக்கியமேரி அணிந்திருக்கும் 8 பவுன் நகையைப் பறித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார்.

 

அதன்படி இரவு 10 மணிக்கு மேல் புதுச்சேரி சண்முகபுரத்துக்கு வந்துள்ளார். ஆரோக்கியமேரி வரும் நேரத்தில் சாலையில் தனியாக நின்று அவர், தனது வண்டி பழுதாகிவிட்டது லிஃப்ட் கொடுக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். ஆரோக்கியமேரியும் கருணை உள்ளத்துடன் லிஃப்ட் கொடுத்துள்ளார். அப்போது கோர்க்காட்டில் தனது நண்பர் ஒருவர் நிற்பதாகவும் அங்கு சென்றுவிடும்படியும் கூறியுள்ளார். அதன்படி ஆரோக்கியமேரி கோர்க்காடு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் ரமேஷ் ஏரிக்கரையில் தனது நண்பர் நிற்பதாக கூறி அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது தாயார் மருத்துமனையில் சிகிச்சை பெறுவதால் அதற்குப் பணம் தேவைப்படுகிறது, உங்களின் நகையைக் கொடுத்து உதவ முடியுமா என ஆரோக்கியமேரியிடம் கேட்க, அதற்கு ஆரோக்கியமேரி மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ரமேஷ் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

 

woman passes away incident made by friend

 

பின்னர் அவரது உடலை சுமந்து சென்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை ஓரம் வைத்து, ஒருலிட்டர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் அவரது ஆடைகள் மட்டும் எரிந்துள்ளது. மீதி எரியாமல் இருந்த உடலை சாக்கு பையில் திணித்து வீசிவிட்டு, அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் போலீசார் தன்னை தேடுவதை உணர்ந்த ரமேஷ், ஆரோக்கியமேரி உடலை மீண்டும் கொண்டு வந்து புதுச்சேரி அருகில் உள்ள பூந்துறை காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். பின்னர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். கொலை நடந்த இடத்திற்கு வந்த ஆரோக்கியமேரியின் உறவினர்கள், சாக்கு மூட்டையில் கிடந்த அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்