Skip to main content

நாட்டில் பட்டினிச் சாவே இல்லையா? -விழுப்புரம் சம்பவத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

supremecourt mention villupuram incident

 

இந்தியாவில் பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை ஒழிக்க சமுதாய உணவகங்களை அமைக்க வேண்டும் என்ற பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான  அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ள பட்டினிச்சாவுகள், ஊட்டச்சத்து குறைவு தொடர்பான விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்தார். சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் குறித்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

அப்பொழுது பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'எந்த ஒரு மாநிலத்திலும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டிருப்பதாக மாநில அரசுகள் சுட்டிக் காட்டவில்லை' என்றார். அப்படி என்றால் நாட்டில் பட்டினிச் சாவுகளே இல்லை என்று சொல்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனவே இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தேவைப்படுகிறது.  சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து முறையான அறிக்கைகளைப் பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

 

supremecourt mention villupuram incident

 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவகுரு என்ற நபருக்குச் சொந்தமான தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிறுவனின் உடலை பிரேதப்பரிசோதனை செய்தபோது உணவில்லாமல் சிறுவன் பசியால் உயிரிழந்தது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்