Skip to main content

''சபர்மதி ஆசிரமம் டூ அதானி மீட்''-முதல்நாள் பயணத்தை முடித்த போரிஸ் ஜான்சன்

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்நாள் பயணமான இன்று விமான நிலையத்திலிருந்து காரில் அழைத்துச் செல்லப்பட்ட போரிஸ் ஜான்சனுக்கு குஜராத் மாநில கலாச்சார முறைப்படி இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பிறகு அகமதாபாத்தில் மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன் காந்தி வாழ்ந்த இடம், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, சபர்மதி ஆசிரமத்தில் கை ராட்டையில் நூல் நூற்று பழகினார். அவருக்கு ஆசிரம நிர்வாகிகள் உதவி புரிந்தனர். பிறகு ஆசிரமத்தின் பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார்.

 

அதில், 'எளிய மனிதரின் ஆசிரமத்திற்கு வந்தது பெரும்பேறாகும். உலகை சிறப்பாக மாற்ற உண்மை, அகிம்சை ஆகிய கொள்கைகளை எவ்வாறு அணி திரட்டினார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது' என எழுதி அவரது கையொப்பத்தை இட்டார். அதன்பிறகு அகமதாபாத்தில் அதானி குழும தலைவர் கௌதம் அதானியைச் சந்தித்துப் பேசினார். பிரிட்டனில் தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போரிஸ் ஜான்சன், ''இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுடன் மற்றொரு தடையற்ற வணிக உடன்பாடு செய்து கொள்ள விரும்புவதாகவும், இது விரைவில் கைகூடும்'' எனவும் நம்பிக்கை தெரிவித்தார். ''உக்ரைனில் நிகழ்ந்துள்ள படுகொலைகளை இந்தியாவும் பிரிட்டனும் கண்டித்துள்ளது. பிரிட்டன்-ரஷ்யா இடையிலான உறவை விட இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு வரலாற்று ரீதியாக மிகவும் வேறுபட்டது'' எனவும் குறிப்பிட்டார். பிறகு குஜராத்தின் ஹலோல் என்னும் இடத்தில் உள்ள ஜேசிபி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், அங்கிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது ஏறி அமர்ந்து விட்டு பின்னர் கீழே இறங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்