Skip to main content

பெண்களுக்கு ஸ்மார்ட் ஃபோன், ஸ்கூட்டி - உ.பி. தேர்தலுக்கு ப்ரியங்காவின் அதிரடி வாக்குறுதி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

PRIYANKA GANDHI VADRA

 

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால், இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

அதிலும், உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் இந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை, தங்களது பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்கவுள்ளது. அவரும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, "உத்தரப்பிரதேச தேர்தலில், 40 சதவீத சீட்டுகள் பெண்களுக்கு வழங்கப்படும்” என அறிவித்தார். பெண்களைக் கவரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோனும், பட்டதாரி பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று சில மாணவிகளை சந்தித்தேன். அவர்கள் தங்களது படிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் ஸ்மார்ட் ஃபோன் தேவை என தெரிவித்தனர். இன்று உத்தரப்பிரதேச காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது, 12ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கவும், பட்டதாரி பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டி வழங்கவும் தேர்தல் அறிக்கை குழுவின் அனுமதியுடன் முடிவெடுத்துள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்