Skip to main content

ராமர் கோவில் திறப்பு விழா; நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Prime Minister Modi's appeal to the people of the country at Inauguration of Ram Temple

உத்தரப் பிரதேசத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அன்றைய தினத்தில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிரவிட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (19-01-24) சென்றார். மேலும், சோலாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 15,024 வீடுகளை பயனாளர்களுக்கு வழங்கினார். 

அதன் பின் பேசிய பிரதமர் மோடி, “வறுமை ஒழிப்பு கோஷம் நமது நாட்டில் நீண்டகாலமாக உள்ளது. ஆனால், வறுமை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. வறுமையை ஒழிக்க என் தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22ஆம் தேதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும். மக்கள் ஏற்றும் ராமஜோதி விளக்கு அவர்களின் வாழ்வில் இருந்து வறுமையை அகற்ற உத்வேகமாக இருக்கும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்